×

திறன் திருவிழா போட்டிகள் 30ம்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்

 

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் தமிழ்நாடு திறன் போட்டிகள்-2025க்கு வருகிற 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என திறன் மேம்பாட்டுக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மாநில இளைஞர்களின் திறமைகளை உலகத் தரத்தில் வெளிப்படுத்தும் நோக்கில் ‘TN Skills 2025 திறன் திருவிழா’ போட்டிகளை ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் நடத்தி வருகிறது.
உலகின் மிகப்பெரிய திறன் மேடையாக கருதப்படும் ‘உலகத் திறன் போட்டிகள் 2026 (ஷாங்காய், சீனா)’ போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்களை தேர்வு செய்வதே இப்போட்டியின் முக்கிய நோக்கம்.

தமிழ்நாடு திறன் போட்டிகள் 2025ல் வெற்றி பெறுவோர் முதலில் இந்திய திறன் போட்டிகள்-2026 தேசிய அளவுப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு பெறுவார்கள். அங்கு சிறந்து விளங்கும் இளைஞர்களே உலகத் திறன் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கி நடந்து வருகிறது. https://naanmudhalvan.tn.gov.in/tnskills/ எனும் இணையதள பக்கம் மூலமாக வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு திறன் மேம்பாட்டுக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. உற்பத்தி மற்றும் பொறியியல், தகவல் மற்றும் தொடர்பியல், கட்டிடம் மற்றும் கட்டுமானம், போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ், கலை, படைப்பாற்றல் மற்றும் நாகரிகம், சமூக மற்றும் தனிநபர் சேவைகள் உள்ளிட்ட பிரிவுகளில் தனி நபராகவோ அல்லது குழுவாகவும் இணைந்து (2 பேர் இணைந்து) இதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம்.

 

Tags : Skill Festival ,Chennai ,Skill Development Corporation ,Tamil Nadu Skill Competitions-2025 ,Tamil Nadu Skill Development Corporation ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...