சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம், ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யுமாறு நிபந்தனை விதித்துள்ளது.
சென்னை மயிலாப்பூரில், ‘தி ஹிந்து பெர்மனன்ட் பண்ட்’ என்ற நிதி நிறுவனத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து, 24.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அதன் இயக்குனர் தேவநாதன், அவரது கூட்டாளிகள் குணசீலன், மகிமைநாதன் உள்பட 6 பேரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், 3வது முறையாக ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவநாதன் உள்பட 3 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தேவநாதனின் சொத்துகள் விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. அதன்படி தேவநாதன் சொத்து விவரங்களை தாக்கல் செய்தார்.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முதலீட்டாளர்கள் தரப்பில், முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீனில் வெளியில் வந்தால் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதற்கான நிதியை திரட்ட முடியும். சாட்சிகளை கலைக்க மாட்டார். கடும் நிபந்தனைகளை விதித்தாலும் ஏற்றுக்கொள்ளவும் தயார். ஜாமீன் வழங்க வேண்டும் என்று தேவநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, முதலீட்டாளர்கள் தரப்பில், தேவநாதன் தாக்கல் செய்த சொத்துகளில் பெரும்பாலானவை 3ம் நபரின் பெயரிலும், நிறுவனங்களின் பெயரிலும் உள்ளன. அதை முடக்குவதில் சிக்கல் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் தேவநாதனுக்கு ரூ.10 லட்சம் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதத்தில் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் தனது பாஸ்போர்ட்டை நிதி நிறுவன மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆஜராக வேண்டும். அக்டோபர் 30ம் தேதிக்குள் ரூ.100 கோடியை சிறப்பு நீதிமன்றத்தில் தேவநாதன் டெபாசிட் செய்ய வேண்டும். அக்டோபர் 30ம் தேதிவரை இந்த இடைக்கால ஜாமீன் தரப்படுகிறது. அன்றைய தினம் அவர் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அவரை காவல்துறையினர் சிறையிலடைக்க வேண்டும். ரூ.100 கோடியை திரட்ட அவர் தனது சொத்துகளை விற்பனை செய்யலாம். அவரது ஜாமீன் மனு மீது அக்டோபர் 31ம் தேதி முடிவெடுக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
