×

லோக் அதாலத் நீதிமன்றத்தில் சாதனை; ஒரே நாளில் 2.42 கோடி வழக்குகளுக்கு தீர்வு: ரூ.7,800 கோடிக்கு மேல் சமரசம்

புதுடெல்லி: நாடு தழுவிய அளவில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் கோடிக்கணக்கான வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டதால், நீதிமன்றங்களின் சுமை பெருமளவு குறைந்துள்ளது. நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு விரைவாகவும், சமரச முறையிலும் தீர்வு காணும் நோக்கில், தேசிய சட்டப் பணிகள் ஆணையம் சார்பில் நாடு முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதாலத்) நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2025ம் ஆண்டின் 3வது தேசிய மக்கள் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி சூர்யகாந்த் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நேற்று நடைபெற்றது.

நாடு முழுவதும் உள்ள தாலுகா, மாவட்ட மற்றும் உயர் நீதிமன்றங்களில் நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்தில், ஒரே நாளில் 2 கோடியே 42 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில், நீதிமன்றத்திற்கு வருவதற்கு முந்தைய நிலையில் இருந்த 2 கோடியே 10 லட்சம் வழக்குகளும், ஏற்கெனவே நிலுவையில் இருந்த 32 லட்சத்து 10 ஆயிரம் வழக்குகளும் அடங்கும். இந்த வழக்குகளின் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடையே ரூ.7,817 கோடிக்கும் அதிகமான தொகைக்கு சமரசம் எட்டப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி, வங்கிக் கடன், குடும்பத் தகராறுகள் (விவாகரத்து தவிர), தொழிலாளர் நலன், நிலம் கையகப்படுத்துதல், நுகர்வோர் குறைதீர், மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டண பாக்கி உள்ளிட்ட பல்வேறு வகையான வழக்குகள் இந்த மக்கள் நீதிமன்றத்தில் தீர்த்து வைக்கப்பட்டன. சாதாரண மக்களுக்கும் எளிதாகவும், விரைவாகவும் நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படும் இந்த மக்கள் நீதிமன்றங்கள், பொதுமக்களிடையே மாற்றுமுறை தீர்வு மையங்கள் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக தேசிய சட்டப் பணிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags : Lok Adalat Court ,New Delhi ,Lok Adalats ,National Legal Services Commission… ,
× RELATED திருப்பதியில் பேனருடன் நின்ற அதிமுக...