×

பள்ளி நுழைவாயிலை ஆக்கிரமித்து எடப்பாடியை வரவேற்று கட்அவுட்: மாணவர்கள் அவதி

பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் தியாகி என்.ஜி.ஆர்.சாலையில் பல்லடம் நகராட்சி மேற்கு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டம் நேற்று பல்லடத்தில் நடைபெற்றது. இதற்காக அதிமுக சார்பில் பல்லடம் நகராட்சி மேற்கு நடுநிலைப்பள்ளி எதிரில், நுழைவாயிலை ஆக்கிரமித்து எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் கொண்ட பெரிய கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

இதனால் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதே போல திருப்பூரில் எடப்பாடி பழனிசாமி தொழில்துறையினருடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்காக 60 அடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருபுறமும் அதிமுகவினர் சாலைகளை மறைத்து வரவேற்பு தட்டிகள் வைத்திருந்தனர்.  இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. பிஎன் ரோடு மேட்டுப்பாளையம் பகுதியில் வைத்திருந்த விளம்பர பேனர்களால் அந்த பகுதியில் உள்ள கடைகள் மறைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக வியாபாரிகள் பலரும் கடும் அவதிக்குள்ளாகினர்.

* ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் மோதல்
திருப்பூர் பி.என்.ரோட்டில் உள்ள மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் எடப்பாடி உரையாற்றினார். அப்போது ஓபிஎஸ் அணியினர் அதிமுக கொடியுடன் திரண்டு வந்து அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டுமென கோஷங்களை எழுப்பினர். இதற்கு போட்டியாக அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். பின்னர் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

* 2026ல் யாருக்கு துரோகம்? எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர், வெம்பக்கோட்டை நகரின் முக்கிய பகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ‘துரோக பழனிசாமியின் துரோக வரலாறு’ என்னும் தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.  அதில், ‘2017ல் முதல்வர் பதவி கொடுத்த சின்னம்மாவுக்கு துரோகம், 2018ல் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு துரோகம், 2022ல் 4 ஆண்டு முதலமைச்சர் பதவி வகிப்பதற்கு துணை நின்ற ஓபிஎஸ்க்கு துரோகம்,

2021ல் 10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுப்பதாக சொல்லி அன்புமணி ராமதாஸ்க்கு துரோகம், 2024ல் எம்பி பதவி தருவதாக கூறி பிரேமலதா விஜயகாந்துக்கு துரோகம், 2025ல் கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு துரோகம், 2026ல் யாருக்கு துரோகம்?’ எனவும், கீழே விருதுநகர் மத்திய மாவட்டம், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம் பகுதியில் ‘அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையன் கருத்தினை உண்மையான அதிமுக தொண்டர்கள் அனைவரும் வரவேற்கிறோம்’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Tags : Edappadi ,Palladam ,Palladam Municipality West Middle School ,Tyagi NGR Road ,Palladam, Tiruppur district ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...