×

ஆவணி மாத கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்

திருத்தணி, செப்.13: ஆவணி மாத கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோயிலில் கடந்த மாதம் ஆடி கிருத்திகை விழாவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகள் செலுத்தி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இந்நிலையில், நேற்று ஆவணி மாதம் கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஆடி கிருத்திகை விழாவில் பங்கேற்று காவடிகள் செலுத்த முடியாத ஏராளமான பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே மலைக்கோயில் படிகள் வழியாகவும், மலைப்பாதை வழியாக வாகனங்களிலும் கோயிலில் குவிந்தனர்.

காவடிகள் செலுத்தி மாட வீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால், மலைக்கோயில் மாடவீதிகளில் ஏராளமான பக்தர்களின் காவடி ஓசைகளுடனும், அரோகரா முழக்கங்களால் மலைக்கோயில் விழாக்கோலம் பூண்டது. பொது வரிசையில் சுமார் 3 மணி நேரமும், ரூ.100 சிறப்பு கட்டண வழியில் 2 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை உற்சவர் முருகப் பெருமான் வெள்ளி மயில்வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆவணி மாத கிருத்திகையையொட்டி ஏராளமான பக்தர்கள் முருகன் கோயிலில் குவிந்து சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தடையின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

Tags : Tiruttani Murugan Temple ,Kavadi ,Avani month ,Krithigai ,Tiruttani ,Avani month of Krithigai ,Aadi Krithigai festival ,Lord ,Muruga… ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...