×

வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஐடிபிஐ வங்கியை விற்க கூடாது: வங்கி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

சென்னை: ஐடிபிஐ வங்கியை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என அனைத்து இந்தியா வங்கி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது, சங்க நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:

ஐடிபிஐ வங்கியின் வைப்புத் தொகை ரூ.3,10,294 கோடி, கடன்கள் ரூ.2,18,420 கோடி, மொத்த வணிகம் ரூ.5,28,714 கோடி. 2024-25 நிதியாண்டில் வங்கி பெற்ற நிகர லாபம் ரூ.7,515 கோடி. குறிப்பாக, ஒன்றிய அரசு திட்டத்தில் இந்த வங்கியில் பல மக்கள் வங்கியில் முதலீடு செய்தார்கள். மொத்தம் 2,106 கிளைகளுடன், 20,000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஐடிபிஐ வங்கி, சமூக நீதி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை வழங்கும் முக்கிய பொதுத்துறை நிறுவனமாக உள்ளது.

ஐடிபிஐ வங்கி பொதுத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் வரை, வைப்பாளர்களுக்கு 100 சதவீத பாதுகாப்பு இருந்தது. தனியார் கையில் சென்றால் இழப்பை சந்திக்க நேரிடும். நாங்கள் உறுதியுடன் வலியுறுத்துகிறோம் – நிதி துறை (வங்கி மற்றும் காப்பீடு) இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நுழைவது, கிழக்கு இந்தியா கம்பெனி வருகையை நினைவுபடுத்துகிறது. ஐடிபிஐ வங்கியின் பொதுத்துறை தன்மையை பாதுகாக்க, அனைத்து இந்தியா வங்கி அதிகாரிகள் சங்கம் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags : IDBI Bank ,Bank Officers Association ,Chennai ,All India Bank Officers Association ,All Indian bank ,Chepauk, Chennai… ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு