×

வீரவநல்லூர் பகுதியில் நெல் அறுவடை பணி நாளைமுதல் துவங்குகிறது

*கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை

வீரவநல்லூர் : வீரவநல்லூர் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்களை விற்பனை செய்யும் வகையில், விரைந்து நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல்லை மாவட்டத்தில் கன்னடியன் கால்வாய் மூலம் சேரன்மகாதேவி, அம்பை தாலுகாவில் சுமார் 13 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இதில் தற்போது நடந்து வரும் கார் சாகுபடியில் இப்பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. ஏனைய இடங்களில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் நாற்று நடவு செய்த விவசாயிகள் தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளனர். 1 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட, உழவுப் பணி, நடவுப் பணி, உரம், களை எடுத்தல், பயிர் பராமரிப்பு என ரூ.20 ஆயிரம் வரை செலவு ஆகியுள்ளது.

இந்நிலையில் தற்போது அரிகேசவநல்லூர், கிரியம்மாள்புரம், பத்தல்மேடு, மானாபரநல்லூர், தென்திருப்புவனம் உள்ளிட்ட கிராமங்களில் நெற்பயிர்கள் முற்றிலும் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

இப்பகுதியில் நாளை முதல் நெல் அறுவடை துவங்குகிறது. இப்பகுதி விவசாயிகளின் வசதிக்காக அரிகேசவநல்லூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. நெல் அறுவடை நாளை துவங்கும் நிலையில் விரைந்து நெல் கொள்முதல் நிலையத்தை திறப்பதன் மூலம் விவசாயிகள் பயன்பெறுவர்.

கடந்த பிசான சாகுபடியில் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நேரடியாக நெல்மணி கொடுத்ததன் மூலம் அவர்களுக்கு 75 கிலோ கொண்ட 1 மூடைக்கு ரூ.400 வரை கூடுதல் லாபம் கிடைத்தது. எனவே விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரிகேசவநல்லூர் பகுதியில் விரைந்து நெல் கொள்முதல் நிலையம் திறக்கவேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Veeravanallur ,Kannada Canal ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...