×

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த ரிதன்யா வழக்கை சிபிஐக்கு மாற்ற ஐகோர்ட் மறுப்பு

சென்னை: வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வரதட்சணை கொடுமை காரணமாக புதுமணப் பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணயை சிபிஐ அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு குழவுக்கு மாற்றக்கோரி ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து விசாரணை அதிகாரி இந்த வழக்கின் விசாரணையை முறையாக மேற்கொள்ளவில்லை. கவினின் செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. அரசியல் தொடர்பும் உள்ளதால் வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு குழவுக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், கவினின் செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறை விசாரணை நடந்து வரும் நிலையில் சிபிஐ அல்லது வேறு அமைப்புக்கு விசாரணையை மாற்றுவதில் எந்த பலனும் இல்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும் உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்ட எஸ்.பி. வழக்கின் விசாரணையை மேற்பார்வையிட வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Tags : High Court ,Rithanya ,CBI ,Chennai ,Madras High Court ,Avinashi, Tiruppur district ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...