×

அரசு பள்ளி ஆசிரியர்களின் கல்வித் தகுதியின் உண்மைத் தன்மை: பள்ளி கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கல்வித்தகுதி குறித்த உண்மைத்தன்மை வாங்கியதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் சுமார் 46 ஆயிரம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2.85 லட்சம் ஆசிரியர்கள், 17 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இதற்கிடையே போலியான கல்விச் சான்றுகள் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் அவ்வப்போது கண்டறியப்படுகின்றனர். அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு தொடர் நடவடிக்கைகளும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்தகைய சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு பணியில் உள்ள அலுவலர்களின் கல்வித் தகுதியை சரிபார்க்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் கல்வித்தகுதி குறித்த உண்மைத்தன்மை தற்போது சரிபார்க்கப்பட்டு வருகின்றன. எனினும், பல்வேறு மாவட்டங்களில் இந்த பணிகள் முடிவடையவில்லை. கல்வி நிறுவனங்களிடம் இருந்து உண்மைத்தன்மை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல்களில், ‘‘ஆசிரியர்கள், பணியாளர்கள் பலர் 10, 12ம் வகுப்பு மற்றும் உயர்கல்விச் சான்றுக்கான உண்மைத்தன்மை பெறாமல் இருக்கின்றனர்.

எனவே, இந்தாண்டு இறுதிக்குள் அனைவரும் உண்மைத்தன்மை பெற்றிருப்பது அவசியமாகும். தொடர்ந்து இதை கண்காணித்து அனைவரும் உண்மைத்தன்மை வாங்கியதை உறுதிசெய்து இயக்குநரகத்துக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.

Tags : School Education Department ,Chennai ,Tamil Nadu School Education Department ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...