×

திருவள்ளூர் மாவட்டத்தில் ராதாகிருஷ்ணன் சிலை அமைக்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

 

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 395 ஆசிரியர்கள் மேற்கண்ட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மேற்கண்ட விருதுகளையும், பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 2810 பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கான ஆணைகளையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: ஆசிரியர்களின் வளர்ச்சிக்கு இந்த அரசு எப்போதும் போல துணை நிற்கும். பள்ளிகளில் பாடங்கள் நடத்த ஒதுக்கப்பட்ட பாடவேளைகளில், தயவு செய்து விளையாட்டுக்கான பாடவேளையை கடன் வாங்கி கணிதம், அறிவியல் பாடம் நடத்தாதீர்கள். நம்ம மாணவர்களை விளையாட அனுமதியுங்கள். மாணவர்கள் நன்றாக விளையாட வேண்டும்.

மாணவர்களுடைய உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். அப்போது தான் அந்த கல்வி அவர்களிடம் சென்று சேரும். ஆசிரியராக இருந்து ஜனாதிபதியாக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவைப் போற்றும் வகையில், நம்முடைய முதலமைச்சர் உத்தரவின்படி திருவள்ளுர் மாவட்டத்தில் அவருக்கு திருவுருவச்சிலை அமைக்கப்படும். அந்த சிலையை முதல்வரே திறந்து வைப்பார். இங்கே விருது பெறும் ஆசிரியர்களுக்கும், பணி நியமனங்கள் பெறுவோருக்கும் முதல்வர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இவ்வாறு துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்தார்.

இதற்கான விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்று, விருது மற்றும் பண முடிப்பும் வழங்கப்பட்டது.

Tags : Radhakrishnan ,Thiruvallur district ,Deputy ,Udayaniti Stalin ,Chennai ,Tamil Nadu ,Dr. ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...