×

நடுங்கும் குளிரிலும் திரளான பக்தர்கள் கிரிவலம் உற்சவமூர்த்திக்கு சிறப்பு பூஜை திருவண்ணாமலையில் மார்கழி மாத பிறப்பையொட்டி

திருவண்ணாமலை, டிச.17: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி நடுங்கும் குளிரிலும் திரளான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோயிலில் உற்சவ மூர்த்திக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தமிழ் மாதங்களில் பெருமைக்குரியதாக போற்றப்படும் மார்கழி மாத பிறப்பையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும், உற்சவ மூர்த்திக்கும், பராசக்தி அம்மனுக்கும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்தனர். அதேபோல், திருவெம்பாவை அருளிய மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட பக்தர்கள், வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவ மூர்த்தியை தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், மார்கழி மாத பிறப்பையொட்டி பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி, திருவண்ணாமலையில் நேற்று நடுங்கும் குளிரையும், பனியையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
மேலும், மார்கழி மாதத்தையொட்டி, பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் பூசணி பூ அலங்கார கோலமிட்டு, அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.

Tags : occasion ,Kirivalam Ursavamoorthy ,Thiruvannamalai ,birth ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...