×

4 மணி நேர குடிநீர் திட்டம் முடக்கம் ரூ.70 ேகாடி பராமரிப்பு தொகை நிறுத்தம்

கோவை, டிச.16: கோவை நகரில் 24 மணி நேர குடிநீர் திட்டம் முடங்கியது. 70 கோடி ரூபாய் பராமரிப்பு தொகை நிறுத்தப்பட்டால் ஒப்பந்த நிறுவனத்தினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 24/7 குடிநீர் திட்டம் செயல்படுத்த கடந்த 218ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக 2,975 கோடி ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி பணிகள் துவக்கப்பட்டது. சர்வே பணி முடிந்ததும் குழாய் பதிப்பு, மேல்நிைல நீர் தேக்க தொட்டி கட்டுதல், பழைய பகிர்மான குழாய் மற்றும் பிரதான குழாய்களை மாற்றுதல் பணிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது சிறுவாணி, பில்லூர், ஆழியாறு, பவானி திட்டத்தில் பெறப்படும் குடிநீரை சேமிக்க 170  இடத்தில் மேல் நீர் தொட்டி உள்ளது. கூடுதலாக 49 இடத்தில் நீர் தொட்டி கட்டி ஒரே நேரத்தில் 4.79 கோடி லிட்டர் குடிநீர் ேசகரிக்க வசதி செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் பணிகள் எந்த பகுதியிலும் முழுமையாக, முறையாக நடக்கவில்லை. முதல் முறையாக ஆர்.எஸ்.புரம் வட்டாரத்தில் பணிகள் துவக்கப்பட்டது. 26 வீதிகளில் குழாய் பதிப்பு பணி முடிந்தும் இங்கே முறையாக இணைப்பு வழங்கவில்லை. திட்ட பணி துவங்கி ஒரு ஆண்டு கடந்தும், ஒரு வீட்டிற்கு கூட குடிநீர் இணைப்பு வழங்க முடியாத அவல நிலையிருக்கிறது. ஒப்பந்த நிறுவனத்திற்கு இதுவரை 25 கோடி ரூபாய் பணி செய்த வகையில் ‘பில் தொகை’ வழங்கப்பட்டது.

குடிநீர் திட்ட பராமரிப்பிற்காக 70 கோடி ரூபாய் வரை மாநகராட்சி நிர்வாகம் வழங்கவேண்டியுள்ளது. இந்த தொகையை மாநகராட்சி வழங்காமல் நிறுத்தி விட்டது. பராமரிப்பு தொைக வழங்காததால் பணிகளை ஒப்பந்த நிறுவனம் அதிரடியாக நிறுத்தி வைத்து விட்டது. பணம் தந்தால் மட்டுமே பணி செய்ய முடியும், பராமரிப்பு வேலைகளை நடத்த முடியும். நீண்ட காலம் பெரும் தொகையை நிலுவையில் வைத்திருந்தால் எங்களால் பணிகளை செய்ய முடியாது என ஒப்பந்த நிறுவனம் அறிவித்துவிட்டது.  மாநகரில் குடிநீர் பணிகளில் சுமார் 3 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் வேலையிழந்து விட்டனர். சில வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்று விட்டனர். குடிநீர் திட்ட பணிகள் நடத்தும் இடத்திற்கு அருகே பாதாள சாக்கடை பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பகுதிகளில் குடிநீர் குழாய்கள் சேதமாகி விட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரில் பல்வேறு இடங்களில் குறிப்பாக பிரதான ரோடுகள் குடிநீர் குழாய் பதிக்க மாநில தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. 300க்கும் மேற்பட்ட பகுதியில் குழாய் பதிக்க ஒப்புதல் கிடைத்தும் பணிகள் துவக்க ஒப்பந்த நிறுவனம் முன் வரவில்லை. பராமரிப்பு தொகையை வழங்காவிட்டால் ஒப்பந்த விதிமுறைப்படி தொடர்ந்து பணி நடத்த மாட்டோம் என நிறுவனத்தினர் மாநகராட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் 24 மணி நேரம் குடிநீர் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர ஆர்வம் காட்டவில்லை. சொத்து வரி, குடிநீர் கட்டண வசூல் முடங்கி கிடக்கிறது. இந்த தொகை முழுமையாக வசூலித்தால்தான் 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகளுக்கு பில் தொகை தர முடியும் எனக்கூறி விட்டது. இதனால் தொடர்ந்து பணி நடக்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

Tags :
× RELATED ஏழை மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்பு