×

கோவை குற்றாலம் விரைவில் திறக்கப்படும்

கோவை, டிச. 16: கோவை குற்றாலம் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், விரைவில் குற்றாலம் திறக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதில், கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சுற்றுலா தலங்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் மீண்டும் செயல்பட அனுமதி அளித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் குரங்கு அருவி உள்ளிட்ட மூடப்பட்டு இருந்த சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், கோவை மக்களின் பிரதான சுற்றுலா தலமாக கருதப்படும் கோவை குற்றாலம் திறக்கப்படவில்லை. இது பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, பெய்து வரும் பருவமழையினால் கோவை குற்றாலத்தில் கணிசமான நீர்வரத்து உள்ளது. இருப்பினும், கடந்த 8 மாதங்களுக்கு மேலாக குற்றாலம் செயல்படாமல் இருப்பதால், அப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. தவிர, பருவமழையினால் பொதுமக்கள் குளிக்கும் இடங்களில் பாறைகள், கற்கள் விழுந்து சேதமடைந்துள்ளது.

எனவே, தற்போது குற்றாலத்தில் சீரமைப்பு பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகள் முடிந்த பின், கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், “கோவை குற்றாலம் நீண்ட நாட்கள் மூடி இருந்ததால், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், தற்போது அங்கு வனவிலங்குகள் நடமாட்டமும் இருக்கிறது. இருப்பினும், அரசு சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதி அளித்துள்ளதால், குற்றாலத்தில் சீரமைப்பு பணிகள் மூடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் இரண்டு வாரங்களில் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. யானை உள்ளிட்டவை நடமாட்டம் இருப்பதால் பாதுகாப்பு அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, கோவை குற்றாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விரைவில் திறக்கப்படும்” என்றார்.

Tags : Coimbatore Courtallam ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது