×

ஆவணங்களின்றி இயங்கியதால் 32 மெட்ரிக் டன் நெல் விதை விற்பனைக்கு தடை: விதை ஆய்வு இணை இயக்குநர் தகவல்

காஞ்சிபுரம், செப்.3: காஞ்சிபுரத்தில் ஆவணங்களின்றி விற்பனை செய்யப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள 32 மெட்ரிக் டன் நெல் விதை விற்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக விதை ஆய்வு இணை இயக்குநர் ஸ்ரீவித்யா தெரிவித்தார்.காஞ்சிபுரத்தில் நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான நெல் விதைகளை, விதை ஆய்வு இணை இயக்குநர் ஸ்ரீவித்யா தலைமையில் விதை ஆய்வு துணை இயக்குநர் வானதி, விதை ஆய்வாளர்கள் செந்தில்குமார், சதீஷ்குமார், சிலம்பரசன், உமாமகேஸ்வரி ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரசால் அறிவிக்கப்படாத மற்றும் ஆவணங்கள் முறையாக இல்லாத ரூ.15 லட்சம் மதிப்புள்ள 32 மெட்ரிக் டன் விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், சேமிப்பு முறை சுகாதாரமாக இல்லாத விதை நெல் விற்பனை நிலையத்தில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, விதை ஆய்வு இணை இயக்குநர் வித்யா கூறுகையில், ‘விதை விற்பனையாளர்கள் அதிக முளைப்பு திறன் கொண்ட சான்று பெற்ற விதைகளை விவசாயிகளுக்கு விற்க வேண்டும்’. விதையின் இருப்பு மற்றும் ரகங்களின் விவரங்கள் விலை பட்டியல் உடன் தகவல் பலகையில் இடம்பெற வேண்டும், அங்கீகாரம் பெற்ற அறிவிக்கப்பட்ட பருவத்திற்கேற்ற ரகங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், விதை நெல்களை உரம் மற்றும் பூச்சி மருந்துடன் கண்டிப்பாக சேமித்து வைக்க கூடாது. மேலும், புதிய ரகங்கள் என்றால் அதற்குரிய பதிவு சான்றிதழ் பகுப்பாய்வு முடிவு அறிக்கை மற்றும் இருப்பு பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும், விவசாயிகளுக்கு விற்பனை ரசீது விவசாயியின் தொலைபேசி எண்ணுடன் பதிவு செய்து வழங்க வேண்டும், ஆவணங்களை முறையாக பராமரிக்க தவறினால் விதை சட்டத்தின்படி விதை விற்பனை நிலையங்களில் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும், சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும், என்றார்.

Tags : Joint Director ,Seed Research ,Kanchipuram ,Joint Director of ,Srividya ,Samba ,
× RELATED உத்திரமேரூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்