×

இடைக்கழிநாடு பேரூராட்சியில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு

செய்யூர், செப். 3: இடைக்கழிநாடு பேரூராட்சியில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படுமா? என்று பேரூராட்சி பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு தெரிவிக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி அமைந்துள்ளது இடைக்கழிநாடு பேரூராட்சி. 21 வார்டுகள் கொண்டுள்ள இந்த பேரூராட்சியில் சுமார் அறுபது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் மிகவும் தாழ்த்தப்பட்டவர்கள் ஆவர். இப்பகுதியில் அவ்வப்போது கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி தகராறுகள் பல நடந்து வருகிறது. மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் தொடர் விபத்துகள் நடக்கிறது. கடலோரம் இப்பகுதி உள்ளதால் மீனவர்களுக்கு விபத்துகள் மற்றும் உயிர் சேதங்கள் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், குற்ற சம்பவங்களை குறித்து புகார் தெரிவிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சூனாம்பேடு அல்லது செய்யூர் காவல் நிலையம் செல்கின்றனர். இந்த இரண்டு காவல் நிலையங்களும் 10 முதல் 15 கிலோ மீட்டர் வரை தொலைவில் அமைந்துள்ளதால் புகார் அளிக்க செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், அலைபேசி மூலம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் பட்சத்தில் சம்பவ இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் காவல் துறையினரும் செல்ல முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இடைக்கழிநாடு பேரூராட்சியின் மைய பகுதியான கடப்பாக்கம் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பேரூராட்சி மக்கள் நீண்டகாலமாக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதற்கான நடவடிக்கை இன்று வரையில் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, மக்கள் நலனை கருத்தில் கொண்டு இடைக்கழிநாடு பேரூராட்சிக்கென புதிய காவல் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Idakazhinadu Town Panchayat ,Seyyur ,East Coast Road ,Seyyur taluk ,Chengalpattu district ,
× RELATED உத்திரமேரூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்