×

மூளையை உண்ணும் அமீபா பரவல் எதிரொலி: நீச்சல் குளங்களை முறையாக பராமரிக்க வேண்டும்; பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா பரவல் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள நீச்சல் குளங்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இயற்கை நன்னீரில் காணப்படும் அரிய வகை மூளையை உண்ணும் அமீபா மூக்கின் வழியாக உடலுக்குள் நுழைந்து மூளையைப் பாதிக்கும். இந்த அமீபாவால் சமீபத்தில் கேரளாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் பாதிப்படைந்து வருகின்றனர். தலைவலி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளை தொடர்ந்து மூளை பாதிக்கப்படும். மூளையை உண்ணும் அமீபா தொற்று ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவாது. எனவே பொதுமக்கள் தேவையின்றி பீதி அடைய வேண்டாம் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை இந்த பாதிப்புக்கு எதிராக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள நீச்சல் குளங்களை ஆய்வு மேற்கொள்ள மாவட்ட பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

நீச்சல் குளத்தில் நாளொன்றுக்கு இரண்டு முறை தண்ணீர் வெளியேற்றிவிட்டு குளோரின் பவுடர் மற்றும் சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அதனை அனைத்து ஹோட்டல் உரிமையாளர்கள் பின்பற்றுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். சில நாட்களுக்கு மாசுபட்ட மற்றும் மாசடைந்த நீர் நிலையங்களில் இருந்து குழந்தைகளை குளிக்காமல் பெற்றோர்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதால், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : -eating amoeba outbreak ,Public Health Department ,Chennai ,-eating ,amoeba outbreak ,Kerala ,Tamil Nadu ,
× RELATED பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில்...