×

போலி நகை ஏற்றுமதி செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி சென்னை விமான நிலையத்தில் சிபிஐ ரெய்டு: சுங்கத்துறை அலுவலகம், வீடு, நகை கடைகளிலும் சோதனை

சென்னை: சென்னையில் இருந்து வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்த தங்க ஆபரணங்களுக்கு பதில் போலி தங்க நகைகளை ஏற்றுமதி செய்து, பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில், சென்னை விமான நிலைய கார்கோ சுங்கத்துறை அலுவலகம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுங்கத்துறை சூப்பிரண்டு அதிகாரி வீடு, சென்னை பூக்கடையில் உள்ள தங்க நகை கடைகள் போன்றவர்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சென்னையில் தங்க நகைகள் உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தங்க நகைகளை மொத்த வியாபாரிகள் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்வது வழக்கம். அவ்வாறு மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்ட 24 கேரட் சுத்த தங்க கட்டிகளை உருக்கி 22 கேரட் தங்கமாக மாற்றி, தங்க நகைகள் தயார் செய்வார்கள். அந்த தங்க நகைகளை மொத்தமாக துபாய், கத்தார், சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து சரக்கு விமானங்களில் ஏற்றுமதி செய்து அனுப்பி வைப்பார்கள்.

இந்த ஏற்றுமதியில் ஈடுபடும் தங்க நகை தயாரிப்பாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு 24 கேரட் தங்க கட்டிகளுக்கு வரி கிடையாது. ஆனால், சாதாரணமாக ஒருவர் வெளிநாட்டில் இருந்து தங்கம் வாங்கி வந்தால் அவரிடம் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் 38 சதவீதம் வரை வரிவிதிப்பு செய்கின்றனர். இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து தங்க ஆபரணங்கள் செய்து மீண்டும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில் பெருமளவு மோசடிகள் நடந்துள்ளது, தற்போது வெளிவந்துள்ளது. தங்க கட்டிகளை இறக்குமதி செய்யும் மொத்த வியாபாரிகள், தங்க நகைகள் உற்பத்தியாளர்கள், தங்க நகைகளை போலி தங்க நகைகளாக தயாரித்து, அதன் மீது தங்க முலாம் பூசி, ஒரிஜினல் தங்க நகை போல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

இதன் மூலம், ஒன்றிய அரசின் நிதித்துறையை கடந்த பல ஆண்டுகளாக ஏமாற்றி மோசடி செய்து வந்ததாக தெரிகிறது. இதனால், ஒன்றிய நிதி அமைச்சகத்துக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து, இந்த போலி தங்க நகைகள் துபாய் நாட்டிற்கு பெருமளவு ஏற்றுமதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி கும்பல் பற்றிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐ அதிகாரிகள், நேற்று அதிகாலையில் இருந்து சென்னை விமான நிலைய கார்கோ, சென்னை பூக்கடை பகுதியில் உள்ள சில நகைக்கடைகள், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு சிலரின் வீடுகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

சென்னை விமான நிலையத்தில் இதுபோன்ற தங்க ஆபரணங்கள் ஏற்றுமதிக்காக தங்க மொத்த வியாபாரிகள் கொண்டு வரும்போது, சென்னை விமான நிலைய கார்கோ பகுதியில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள், அந்த நகைகள் அனைத்தையும் அதற்கான உள்ள சிறப்பு கருவிகள் மூலம் பரிசோதித்து, அனைத்து நகைகளும் 22 கேரட்டில் செய்யப்பட்ட நகைகள் என்பதை உறுதி செய்வார்கள். அதன்பின்பு விமானம் மூலம், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள். அப்படி அனுப்பி வைக்கப்பட்ட தங்க நகைகளில் பெருமளவு போலி நகைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவர்கள் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, போலி ஆபரணங்கள் ஏற்றுமதி மோசடியில், தங்க உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள் மட்டுமின்றி, அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட பலர் இதில் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. அதோடு சென்னை விமான நிலையத்தில், தங்க ஆபரணங்களை பரிசோதிக்கும், இயந்திரங்களையும் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த இயந்திரங்களில் சில முறைகேடுகள் செய்து, தரம் குறைந்த கவரிங் நகைகளை, தங்க நகைகள் போல் காட்டுவதற்கு, சில மோசடிகள் செய்யப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்போது கிடைத்த தகவலின்படி கடந்த 2022ம் ஆண்டு சென்னை விமான நிலையத்திலிருந்து சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய தங்க நகைகள் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டதில் மோசடி நடைபெற்றிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு சென்னை விமான நிலையத்தில் கார்கோ பிரிவில், சுங்கத்துறை சூப்பிரண்டாக பணியாற்றும் ஒரு அதிகாரி வீடு செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அதிகாரி வீட்டிலும், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரித்து வருகின்றனர். இதையடுத்து சிபிஐ விசாரணை சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* முக்கிய ஆவணங்கள் சிக்கின
சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை 7 மணி முதல் சென்னை மீனம்பாக்கம், செங்கல்பட்டு உள்பட 3 இடங்களில் சோதனை நடத்தினர். அதன்படி, கோயம்பேட்டில் உள்ள சுங்கத்துறை கண்காணிப்பாளர் துளசிராம், அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் உள்ள சுங்கத்துறை அதிகாரி சுரேஷ் மற்றும் பூக்கடை வெங்கையா தெருவில் வசித்து வரும் நகை வியாபாரி சுனில் ஆகியோர் வீடுகளில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் தங்க நகை வியாபாரத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : CBI ,CHENNAI AIRPORT ,Chennai ,Chennai Airport Cargo Customs Office ,Chengalpattu district ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்