×

பித்ரு சாபம் நீக்கும் தசாவதார பெருமாள் கோயில்

திருநெல்வேலி – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள வல்லநாட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அகரம் என்னும் ஊர். இங்கு அருள்மிகு அஞ்சேல் என்ற தசாவதாரப் பெருமாள் திருக்கோயில், தாமிரபரணி நதி தட்சிண கங்கையாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது. தசாவதார தீர்த்தம், கிரகதோஷ தீர்த்தமாக உள்ளது. இத்திருக்கோயில் மிகவும் புராண பிரசித்தி பெற்ற தலமாகும். வேதவியாச மகரிஷியால் தாமிரபரணி மகாத்மிய புராணத்தில் பெரிதும் போற்றப்படுகிறது. கடவுள், மன் நாராயணன் தசாவதார தரிசனம் தந்து மந்திர உபதேசம் அருளி ஒரே தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள தசாவதார தீர்த்தம், காசிக்கு இணையாக தட்சிண கங்கா என வேத வியாச மகரிஷியால் போற்றப்படுகிறது.

இங்கு செய்யும் பரிகாரங்கள், காசி கங்கைக் கரையில் செய்யும் புண்ணிய பலனைத் தரும் என்பது ஐதீகம். சிறந்த பித்ரு பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது. வேதகாலத்தில் கடவுள் மன் நாராயணன் இங்குதான் மித்ரசகா சந்திர மாலினி என்ற தம்பதியருக்கு ஒரு மாசி மாதம் துவாதசி திதியன்று ஒரே நேரத்தில் தசாவதார காட்சி தந்து ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் துவாதசி மந்திரத்தை உபதேசித்து அருளியதாக தாமிரபரணி மகாத்மிய புராணம் எனும் நூலில்கூட வேதவியாச மகரிஷி மிகவும் சிறப்பாக அருளியுள்ளார்.இங்கு பகவான், தசாவதார காட்சி தந்ததைக் குறிக்கும் விதமாக ஒரே அழகான சிற்பத்தில் தசாவதார மூர்த்திகளை தரிசிக்க முடியும்.

நவக்கிரக தோஷங்கள், ஜாதகதோஷங்கள், பித்ரு சாபம், பித்ரு தோஷங்கள் என பல வகை தோஷங்களை போக்கவும், பரிகாரம் செய்யவும் சிறப்பு வழிபாடுகள் செய்யவும் உகந்த தலம் இது. குழந்தை பாக்கியம் வேண்டி அருள்மிகு வேணுகோபாலனுக்கு படிப்பாயாச வழிபாடு, திருமண பாக்கியம் வேண்டி ராமபிரானுக்கு நெய் தீபம் ஏற்றும் வழிபாடு. குடும்ப பிரச்னைகள் தீர அருள்மிகு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மற்றும் சுந்தரகாண்ட பாராயணம் ஆகிய வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகிறது.பத்து அவதார மூர்த்திகளும் ஒவ்வொரு கிரக பரிகார மூர்த்தியாக அருள் பாலிக்கின்றனர். ஆண்டு தோறும் மாசி மாதம் வளர்பிறை துவாதசி அன்று தசாவதார ஜெயந்தி, புரட்டாசி சனிக் கிழமைகளில் கருட சேவை உற்சவம், வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜைகள் மற்றும் ஆனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் வருடாபிஷேகம் ஆகியவை நடைபெறுகின்றன.

நாகலட்சுமி

Tags : Perumal ,Pitru ,Akaram ,Vallanad ,Thoothukudi Highway, Tirunelveli ,Perumal Temple ,Arulmigu Angele ,Thamiraparani River ,Tatshina Ganges ,
× RELATED திருவாரூர், தியாகராஜர் திருக்கோயில்