×

கந்து வட்டி, ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீத முடிவு 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை விழுப்புரம் அருகே பதறவைக்கும் சம்பவம்

விழுப்புரம், டிச. 15: விழுப்புரம் அருகே கந்து வட்டி தொல்லையாலும், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாலும் மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தச்சுத்தொழிலாளி மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் மோகன்ராஜ்(38). தச்சுத்தொழிலாளி. இவருக்கு விமலேஸ்வரி(35) என்பவருடன் திருமணம் நடந்து, ராஜ(8), வித்ய(6), பாலன்(4) என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மகள்கள் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தனர். மோகன்ராஜ், அதே ஊரில் வளவனூர் மெயின் ரோட்டில் மரப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடும்பத்துடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். நேற்று அதிகாலை நீண்டநேரமாகியும் மோகன்ராஜ் வீடு பூட்டியே கிடந்தது. இதனிடையே, மரப்பட்டறையில் வேலை செய்யும் பரந்தாமன் என்பவர் காலை 8.30 மணிக்கு வேலைக்கு வந்துள்ளார். ஆனால், மரப்பட்டறையை திறக்க மோகன்ராஜ் வராததால் சந்தேகமடைந்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது முன்பக்க கதவு தாழிடப்பட்டிருந்ததால், வீட்டின் பின்பக்க ஜன்னலை திறந்து பார்த்தபோது விமலேஸ்வரி பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவிக்க அங்கு பெரும்கூட்டம் கூடியது. மேலும் வளவனூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், டிஎஸ்பி நல்லசிவம் தலைமையில்  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, ராஜ, வித்ய, பாலன் ஆகிய மூன்று பேரும் ஒரே புடைவையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்துள்ளனர். மோகன்ராஜ், விமலேஸ்வரி தனித்தனியாக பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  ஊர் பொதுமக்கள், உறவினர்கள் இதனைப்பார்த்து கதறி அழுத்தனர். இதனைத்தொடர்ந்து சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், திருமணத்திற்கு முன்பு மோகன்ராஜ் சென்னையில் தங்கி தச்சு வேலை செய்து வந்ததும், பின்னர், சொந்த ஊரிலேயே தொழில் செய்து வந்த நிலையில் சமீபத்தில் சொந்தமாக மரப்பட்டறை வைத்து நடத்தி வந்தது தெரியவந்தது.  மோகன்ராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கி சொந்தமாக வீடு கட்டியதும், மரப்பட்டறையை விரிவுபடுத்த நண்பர்களிடம் கடன் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.
ஊரடங்கினால் மரப்பட்டறை தொழிலில் லாபம் கிடைக்காததால் மோகன்ராஜ் வட்டி கட்ட சிரமப்பட்டு வந்துள்ளார், கடன் கொடுத்தவர்கள் அழுத்தம் கொடுக்கவே மனஉளைச்சலில் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. முதலில் மூன்று குழந்தைகளையும் ஒரே தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துவிட்டு பிறகு கணவன், மனைவி இருவரும் தனித்தனியாக தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அவரது மோகன்ராஜின் மாமனார், உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தினால் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்ைத ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் தொடரும் தற்கொலைகள்:  விழுப்புரம் மாவட்டத்தில் தொழில் நஷ்டம், மது, சூது, லாட்டரிக்கு அடிமை விவகாரத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவகிறது. மாவட்டத்தின் தலைநகரான விழுப்புரம் ஒருகாலத்தில் கொலைநகரமாக இருந்தது. தற்போது தற்கொலை நகரமாக மாறி வருகிறது. கடந்த 2018ம் ஆண்டில், விழுப்புரம், கைவல்லித்தெருவை சேர்ந்த நெல் வியாபாரி பாபு, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தனது மனைவி கவிதா, இரட்டைக் குழந்தைகளாக கீர்த்தி, கீர்த்தனா ஆகியோருக்கு தேனில் விஷம் கலந்து கொடுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே விழுப்புரம், சித்தேரிக்கரை நகைத் தொழிலாளி அருண், கடன் பிரச்னையால் மனைவி சிவகாமி, மகள்கள் தர்ஷிணி, பிரியதர்ஷிணி, பாரதி ஆகியோருக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்ளும் காட்சிகளை வாட்ஸ்அப் மூலம் அனைவருக்கும் வீடியோ மூலம் அனுப்பி, இந்த கொடூர காட்சிகளை பார்க்க செய்துள்ளார்.

இந்த இரண்டு குடும்ப தற்கொலை மனைவி சம்மதத்துடன் அரங்கேறியது என்பது தான் மனதை பதபதைக்கிற விஷயமாகும்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் பிரச்னை அதிகரித்து குடும்பம் நடத்த முடியாமல் சித்தேரிக்கரையை சேர்ந்த கூலித்தொழிலாளி கஜேந்திரன் மதுவுக்கு அடிமையாக, அவரது மனைவி, ஒரு மகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இரண்டு வாரத்திற்கு முன்பு, திண்டிவனம் அருகே தளவாளப்பட்டைச் சேர்ந்த ஐயப்பன், கந்துவட்டி கொடுமையால் மகள் ஆர்த்தீஸ்வரியைக் கொலை செய்து, தானும் தற்கொலை செய்துகொண்டார்.

ஒரே தூக்கில் தொங்கிய 3 குழந்தைகள் இறந்துபோன மோகன்ராஜின் இரண்டு மகள்களும், ஒரு மகனும் எப்போதும் ஒன்றாகவே விளையாடுவார்களாம். படுத்து தூங்கும்போது தம்பியை பிரியாத சகோதரிகள் பாசம் ஊரில் வியக்கத்தக்க வகையில் இருந்ததாம். இது சாவிலும் நீடித்துள்ளதாக ஊர்மக்கள் கண்ணீர் மல்க கதறுகின்றனர். மோகன்ராஜ், தனது இரண்டு மகள்கள், ஒரு பாச மகனை சாவிலும் பிரிக்காமல் ஒரே கயிற்றில் தொங்கவிட்டு கொலை செய்த கொடூர சம்பவம் அனைவரையும் பதறவைத்துள்ளது.  துடிதுடிக்க இறந்த காட்சிகள் ஓராண்டுகூட நிறைவடையவில்லைவிழுப்புரத்தில் குழந்தைகள் துடி துடிக்க இறந்த வீடியோ காட்சிகள் மனதைவிட்டு மறையாத நிலையில், நேற்று மீண்டும் அப்படியொரு சம்பவம் நடந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம், சித்தேரிக்கரையைச் சேர்ந்த நகைத்தொழிலாளி அருண் கடன் பிரச்னையால் மனைவி சிவகாமி, மகள்கள் தர்ஷிணி, பிரியதர்ஷிணி, பாரதி ஆகியோருக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து கொள்ளும் காட்சிகளை வாட்ஸ்அப் மூலம் அனைவருக்கும் வீடியோ மூலம் அனுப்பி, இந்த கொடூர காட்சிகள் நாடு முழுவதும் சமூகவலைதளங்களில் வைரலாகி பார்ப்போரின் மனதை பதற வைத்தது. இந்த சம்பவம் நடந்து நேற்றுமுன்தினம் தான், அருண் குடும்பத்தினரின் முதலாம் ஆண்டுநினைவு தினத்தை நகர பொதுமக்கள் மலர்தூவி அனுசரித்தனர். அப்போது, 3 நம்பர் லாட்டரியை ஒழிக்க வேண்டும், ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்கவேண்டுமென்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஆனால், மறுநாளே தற்போது கடன் பிரச்னையால் மூன்று குழந்தைகளை கொலைசெய்துவிட்டு, கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : suicide ,Villupuram ,children ,
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...