×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனுவை விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கை தற்போது விசாரிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், 2024 ஜூலை 5ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை காவல்துறை முறையாக விசாரணை நடத்தாததால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, இதே கோரிக்கையுடன் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஏற்கனவே கீனோஷ் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அந்த மனு மீதான தீர்ப்பு வரும் வரை இந்த மனுவை விசாரிக்க முடியாது. கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை செப்டம்பர் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags : HC ,Armstrong ,CBI ,Chennai ,Madras High Court ,Bahujan Samaj Party ,Tamil Nadu ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...