×

அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடியில் அரசு பள்ளி மாணவர்கள் 28 பேர் தேர்வு

சென்னை: சென்னை ஐஐடியில், அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் கீழ் பிஎஸ் தரவு அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் போன்ற இணையவழி படிப்புகள் 2022ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த படிப்புக்கான பிரத்யேக நுழைவு தேர்வு ஐஐடியில் நடைபெறுகிறது. வரும் காலங்களில் வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்பதால் இந்த படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களை அதிகளவில் சேர்க்க பள்ளி கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த படிப்பில் தேர்வாகும் மாணவர்களுக்கு தேர்வு எழுதும் கட்டணத்தை அரசு சார்பில் செலுத்தப்படுகிறது.

இதுதவிர தேர்வில் தேர்வாகும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், கல்வி கட்டணத்தில் 75 சதவீதத்தை ஐஐடியே வழங்குகிறது. மீதமுள்ள 25 சதவீதத்தை எஸ்சி, எஸ்டி மாணவர்களாக இருப்பின் அவர்களுக்கான கட்டணத்தை தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் செலுத்துகிறது. மேலும் மற்ற பிரிவினர் 25 சதவீத கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.

அதன்படி இத்திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டு முதல் இதுவரை 353 அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அதைதொடர்ந்து இந்தாண்டும் 170 பேர் தகுதித் தேர்வை எழுதியுள்ளனர். அதில் 28 பேர் வெற்றி பெற்று, சென்னை ஐஐடியில் சேர்ந்துள்ளனர். இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சமூக வலைத் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தும் திட்டங்களின் துணையோடு அரசுப் பள்ளி மாணவச் செல்வங்கள் கல்வியில் உயரங்களை எட்டிப்பிடித்து சாதனை படைக்கிறார்கள். அவ்வகையில் அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் கீழ் நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 28 பேர் ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் இணைந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

Tags : IIT ,Chennai ,BS Data Science ,Systems ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்கள்...