- ஐரோப்பிய ஒன்றிய
- மத்திய குற்றப்பிரிவு
- சென்னை
- தேசிய தொழில்நுட்ப
- ஆராய்ச்சி நிறுவனம்
- சென்னை தாரமணி
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
சென்னை: சென்னை தரமணியில் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த 17.6.2023ம் தேதி ஒன்றிய அரசு பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது.
அப்போது ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி வெற்றி பெற்ற அரியானா மாநிலத்தை சேர்ந்த காஜல், பீகார் மாநிலத்தை சேர்ந்த சகுன்குமார், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த டிங்கு, பிரேம் சிங், அங்கித்குமார், ஜித்து யாதவ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தரமணியில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 10க்கும் மேற்பட்டோர் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று தற்போது ரயில்வே உள்ளிட்ட ஒன்றிய அரசு பணியிடங்களில் பணியாற்றி வருவது உறுதியானது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆள் மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி பணியில் இருந்த பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த காஜல், சகுன்குமார், டிங்கு, பிரேம் சிங், அங்கித்குமார் மற்றும் ஜித்து யாதவ் ஆகிய 6 பேர் கடந்த மாதம் 4ம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும் பலர் தலைமறைவாக இருந்து வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் பணம் கொடுத்து பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த சகுன்குமாருக்கு பதில் ஆள்மாறாட்டம் மூலம் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜெய்சங்கர் பிரசாத் (34) என்பவர் தேர்வு எழுதினார். இவர் தற்போது உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பகுதியில் உள்ள ரயில்வே துணை பொறியாளராக கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
அதேபோல் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த டிங்கு என்பவருக்காக ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதிய ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வரும் அரவிந்த் குமார் (30), உத்தரபிரதேசத்தில் இந்தி ஆசிரியராக கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தர்மேந்திர குமார் ஆகிய 3 பேரை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை ஒன்று உத்தரபிரதேச மாநிலம் சென்று கைது செய்தனர்.
தர்மேந்திர குமார் மீது உத்தரபிரதேச மாநிலத்தில் ஆள் மாறாட்டம் மூலம் தேர்வு எழுதிய வழக்கும் நிலுவையில் உள்ளது.
அதைதொடர்ந்து, கைது செய்யப்பட்ட 3 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த ஆள் மாறாட்டம் மோசடி வழக்கில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஜித்து யாதவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
