- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்தியா
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கம்
- சென்னை வர்த்தக மையம்
- தென் இந்தியா
- இயந்திர வர்த்தகம்
சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடந்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் இரண்டாவது மாநில மாநாட்டில், தென்னிந்தியாவின் முதன்மையான உள்கட்டமைப்பு கட்டுமான இயந்திர வர்த்தகக் கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, மாநாட்டு மலரை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்த நிகழ்ச்சியில் முதல்வர்தான் முதலில் கலந்துகொள்வதாக இருந்தது.
பல்வேறு பணிச்சுமையின் காரணமாக, முதல்வர் என்னை அழைத்து, “நீ நிச்சயமாக கலந்து கொள்ள வேண்டும் என்று உரிமையோடு எனக்கு உத்தரவிட்டதால் இன்றைக்கு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். உங்களைப் போன்ற எண்ணற்ற ஒப்பந்தக்காரர்களின் உழைப்பால் தான், இன்றைக்கு இந்தியாவிலேயே அதிநவீன Infrastructure கொண்ட முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த முழுப் பெருமையும் உங்களைத்தான் சேரும்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தொழில் நிறுவனங்கள் வருகின்றன என்றால், அவர்கள் முதலில் தேர்வு செய்வது இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடுதான் இந்தியாவிற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை கிண்டியில் (ரூ.240 கோடி) கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனை, சென்னை மெரினா கடற்கரையில் கலைஞருக்கு (54 கோடி மதிப்பில்) நினைவு மண்டபம்,
மதுரையில், (ரூ.220 கோடியில்) கலைஞர் நூற்றாண்டு நூலகம், கன்னியாகுமரியில், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இடையே மிகக்கடுமையான சூழலை எதிர்கொண்டு ரூ.37 கோடி எனும் மிகக்குறைவான பட்ஜெட்டில் மிகப் பிரமாண்டமான கண்ணாடி மேம்பாலம் என மிகக் குறுகிய காலத்தில் நீங்கள் கட்டி முடித்து சாதனை படைத்துள்ளீர்கள்.
உலகிலேயே முதன்முறையாக சென்னையில் ரூ.640 கோடி மதிப்பில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மேம்பாலம் அமைத்து வருகிறீர்கள். தமிழ்நாட்டில் அடுத்த நூற்றாண்டுக்கு தேவையான கட்டுமானங்களை உருவாக்கிக் கொண்டு வருகிறீர்கள். முந்தைய ஆட்சியாளர்களின் 10 ஆண்டு கால ஆட்சியில், ஒப்பந்ததாரர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் இருந்தன. இங்கே அமைச்சர் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார்.
முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர், திராவிட மாடல் அரசு உங்களுக்கு இன்றைக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் தமிழ்நாட்டுக்காக போடுகிற சாலைகளும் – எழுப்புகிற கட்டிடங்களும் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ரோடு மேப் என்று சொல்வதில் மிகையல்ல.
இந்த அரசுக்கு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் மட்டுமில்லை, அனைத்து ஒப்பந்ததாரர்களும் ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர் செல்வராஜ், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திருசங்கு, முதன்மை நிர்வாக அலுவலர் பூபிந்தர் சிங், மாநாட்டு குழு தலைவர் சுப்ரமணியம், அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் வெங்கடேசன், கட்டுமானத் துறையைச் சார்ந்த சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
