×

மூளை தின்னும் அமீபா நோய் பாதிப்பு குளம், குட்டையில் குளிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து, அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையை மருத்துவமனையின் முதல்வர் தலைமையிலான அனைத்து சிறப்பு மருத்துவர்களும் மிகுந்த கவனத்தோடு, தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக உள்ளது. பொதுமக்களும் அரசியல் இயக்கங்களை சேர்ந்த முன்னோடிகளுக்கும் ஒரு வேண்டுகோள். தேவையில்லாமல் அவரை நேரில் சந்திப்பதை தவிர்க்க வேண்டும்.

கேரளாவில் 18 பேர் மூளை தின்னும் அமீபா நோய் பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த 1 வாரகாலமாகவே இந்த நோயின் தன்மை கூடியிருக்கிறது. நோய் பாதிப்பிற்கான காரணங்களை மருத்துவ வல்லுநர்களிடம் கேட்கும்போது, அசுத்தமான நீர், மாசுபட்ட நீர் நிரம்பிய குளம், குட்டைகள், நீர்நிலைகளில் தேங்கிய சேறுகளில் தான் அமீபா உருவாகிறதாக சொல்லப்படுகிறது. அத்தகைய குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியே அமீபா சென்று மூளையை பாதித்து, மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு மரணங்கள் நிகழ்கிறது.

இது தொற்று நோய் இல்லை என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். எனவே பெரிய அளவில் பதற்றமடைய வேண்டியதில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்துவது என்னவென்றால் குளம் மற்றும் குட்டைகள், பராமரிப்பு இல்லாத நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. தெருநாய்கள் பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் கருத்துகள் மாறுபட்டு உள்ளது.

தெருநாய்களுக்கு கருத்தடை செய்து அதனை பிடித்த பகுதிகளில் விட்டுவிடுவது மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை. இதற்கு முன்பு வட்டார அரசு மருத்துவமனை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே மருந்துகள் வழங்கப்பட்டு வந்தது. இந்த அரசு அமைந்த பிறகு தான் தமிழ்நாட்டு மருத்துவத்துறை வரலாற்றில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்கடிக்கு ஏஆர்வி மருந்துகள், பாம்புக்கடிக்கு மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,M. Subramanian ,Chennai ,Communist Party of India ,Nallakannu ,Rajiv Gandhi Government General Hospital ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...