×

இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்திற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பெண்களின் பாதுகாப்பு மற்றும் மகளிருக்கு அதிகாரம் அளித்தலுக்கான பல திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. சென்னை மாநகரில் 250 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்துவதுடன் பெண்களின் பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்திடும் பொருட்டு ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்’ வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இத்திட்டம் வழிவகை செய்யும்.

ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கும். இது அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும். இளஞ்சிவப்பு ஆட்டோ பெறும் பயனாளிகளுக்கு கட்டணங்கள் ஏதுமின்றி ‘ஊர் கேப்ஸ்’ செயலி பயன்படுத்த வழிவகை செய்து தரப்படும்.

சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு சிஎன்ஜி ஆட்டோக்கள் இயக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல்கட்டமாக தகுதியான பயனாளிகளுக்கு சர்வதேச மகளிர் தினமான 8.3.2025 அன்று முதல்வர் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை மகளிருக்கு வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து சிஎன்ஜி ஆட்டோக்கள் மூன்றாம் கட்டமாக வழங்கப்பட உள்ளதால் தகுதியான பயனாளிகளிடம் 15.9.2025 தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
* பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
* கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* 20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
* சென்னையில் குடியிருக்க வேண்டும்.

எனவே, சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்ட விருப்பமுடைய பெண் ஓட்டுனர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை-1, சிங்காரவேலர் மாளிகை, 8வது தளத்தில் செயல்படும் சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு) அல்லது சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (தெற்கு) என்ற முகவரியிட்டு செப்டம்பர் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Government ,Chennai ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...