×

சமூக வலைத்தளத்தில் வைரலான கூமாப்பட்டி பிளவக்கல் அணை மேம்பாட்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

சென்னை: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி கிராமம், பிளவக்கல் பெரியார் அணை மற்றும் கோயிலாறு அணையுடன் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. கண்ணுக்கு விருந்தளிக்கும் இயற்கைக் காட்சிகளைக் கொண்டுள்ளது. இந்த கிராமம் குறித்து இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட வீடியோ வைரலாகி, நெட்டிசன்கள் பலரும் “கூமாபட்டி எங்கே இருக்கு” எனத் தேடத் தொடங்கினர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பிளவக்கல் பெரியாறு அணையின் அருகில் உள்ள பூங்காவுக்கு செல்ல, 2020 மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக தடை விதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து விடுமுறை நாள்களில் வரக்கூடிய பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இந்த பூங்காவை தமிழக அரசு சீரமைத்து சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் நீரூற்றுகள், பயணிகள் தங்கிச் செல்வதற்கு போதுமான அறைகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தமிழக முதல்வர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள ஆய்வுக்காக விருதுநகர் மாவட்டத்திற்கு சென்றிருந்த நிலையில், வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவை சீரமைப்பதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவை சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பூங்காவில் 3 கி.மீட்டருக்கு சுற்றுச்சுவர், கிழவன் கோயில் பள்ளிவாசல் முதல் பெரியாறு அணை பூங்கா வரை இரண்டரை கி.மீட்டர் தார் சாலை, விளையாட்டு உபகரணங்கள், மான் சிலை, காந்தி காலை, காளை, ரயில், பார்வையாளர் கோபுரம், சிறுவர்கள் விளையாட்டு, கழிவறை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Goomapatti ,Plavakkal ,Dam ,Chennai ,Vathirairuppu ,Virudhunagar district ,Plavakkal Periyar Dam ,Koilaru Dam ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...