×

பாகிஸ்தானிலிருந்து நேபாளம் வழியாக பீகாருக்குள் 3 தீவிரவாதிகள் ஊடுருவல்: உளவுத்துறை எச்சரிக்கை; மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு

பாட்னா: பாகிஸ்தானிலிருந்து பீகார் மாநிலத்துக்குள் 3 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை அதிர்ச்சி தகவல் வௌியிட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என குற்றம்சாட்டிய ஒன்றிய அரசு, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த 4 நாள் போர் மே 10ம் தேதி முடிவுக்கு வந்தது.

இந்தியா பாகிஸ்தான் இடையே தற்போது அமைதியான சூழல் நிலவினாலும் பதற்ற நிலை நீடிக்கிறது. இந்த சூழலில் பீகாரில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து நேபாளம் வழியாக 3 தீவிரவாதிகள் பீகாருக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர்கள், தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளான, பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரை சேர்ந்த ஹஸ்னைன் அலி, உமர் கோட்டை சேர்ந்த அடில் மற்றும பாகிஸ்தானின் பஹாவல்பூரை சேர்ந்த உஸ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதிகளின் பாஸ்போர்ட், புகைப்படங்களும் வௌியிடப்பட்டுள்ளன. இவர்கள் 3 பேரும் நேபாளத்தின் அராரியா வழியாக பீகாருக்குள் நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பீகார் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, உச்சக்கட்ட கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதுகுறித்து பீகார் டிஜிபி வினய் குமார் அளித்த பேட்டியில், “மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும், பீகார் காவல்துறையின் பல பிரிவுகளுக்கும் பொதுவான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தேசவிரோத சக்திகளின் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார். 3 தீவிரவாதிகள் ஊடுருவல் பற்றிய கேள்விக்கு கூடுதல் விவரங்களை வௌியிட வினய் குமார் மறுத்து விட்டார்.

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து தலைநகர் பாட்னாவில் உள்ள தகாத் ஸ்ரீஹரிமந்திர், பாட்னாவில் உள்ள பாட்னா சாஹிப், புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயில் வளாகம், ராஜ்கிரில் உள்ள விஸ்வசாந்தி ஸ்தூபி, மகாவீர் கோயில் உள்பட பல முக்கிய சுற்றுலா தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பூர்னியா, கதிஹார், அராரியா, கிஷன்கஞ்ச் உள்பத நேபாளம் மற்றும் வங்கதேசத்துடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் மாவட்டங்களிலும் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பீகாரில், மக்களவை தலைவர் ராகுல் காந்தியின் பீகார் வாக்காளர் அதிகார யாத்திரை நடந்த வரும் நிலையில் தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்த உளவுத்துறையின் எச்சரிக்கை அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags : Bihar ,Nepal ,Patna ,Pakistan ,Union government ,Pahalgam ,Jammu and ,Kashmir ,Pakistan… ,
× RELATED நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புடன்...