திருமங்கலம்: திருமங்கலம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறில் இரண்டரை வயது பெண் குழந்தையை கொன்று, சாக்கு மூட்டையில் கட்டி வைத்த தந்தை கைதானார். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கோட்டையூரை சேர்ந்தவர் கடற்கரை மகன் பாண்டிசெல்வம்(25). மனைவி வனிதா(24). மகள் பார்கவி(3). பாண்டிசெல்வம் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் சிட்கோவில் பவுடர் தயாரிக்கும் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். வனிதா சிவகாசி பட்டாசு கம்பெனியில் வேலை பார்க்கிறார்.
கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு தம்பதிக்குள் குடும்ப சண்டை உருவாகி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வனிதா கணவரை பிரிந்து அதே ஊரில் தனியாக வசித்து வந்தார். குழந்தை பார்கவி இரவு வேளையில் தாயுடனும் தங்கி இருப்பார். வனிதா பகலில் பட்டாசு ஆலை வேலைக்கு செல்வதால், மகள் பார்கவியை பாண்டிசெல்வம் தான் பணிபுரியும் கப்பலூர் நிறுவனத்திற்கு அழைத்து செல்வது வழக்கம். கடந்த 25ம் தேதி குழந்தையுடன் வேலைக்கு வந்த பாண்டிசெல்வத்திற்கும், மனைவி வனிதாவுக்கும் செல்போனில் தகராறு எழுந்துள்ளது. அப்போது குழந்தை பார்கவி அழுதுள்ளார்.
மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் இருந்த பாண்டிசெல்வம், ஆத்திரத்தில் மகளை அடித்து, அருகேயுள்ள தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளார். இதனால் தண்ணீரில் மூழ்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சிறிது நேரம் கழித்து பாண்டிசெல்வம் குழந்தையை சென்ற பார்த்தபோது இறந்தது தெரியவரவே அதிர்ச்சியடைந்தார். உடனே குழந்தையின் உடலை தூக்கி தான் பணி புரியும் நிறுவனத்தில் மறைத்து வைத்தார். இரவு உடன் பணி புரியும் அனைவரும் சென்ற பின்பு சாக்கு மூட்டையில் பவுடரை நிரப்பி, அதில் குழந்தையை வைத்து மூட்டையை கட்டி இயந்திரத்தின் அடியில் வைத்துள்ளார்.
பின்னர் மகளை காணவில்லை என அக்கம்பக்கத்தில் தேடுவது போல நடித்துள்ளார். மகளை காணவில்லையென திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். நேற்று காலை கப்பலூர் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த பாண்டிசெல்வத்துடன் பணியாற்றும் தொழிலாளி முத்துக்குமார், நிறுவனத்தில் இயந்திரம் அருகே துர்நாற்றம் வீசுவதையறிந்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், எஸ்ஐ முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிட்கோ நிறுவனத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது இயந்திரத்தின் அருகேயுள்ள மூட்டையை திறந்து பார்த்தபோது, உள்ளே குழந்தை பார்கவியின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாண்டிசெல்வத்தை பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து திருமங்கலம் டவுன் போலீசார் பாண்டிசெல்வத்தினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
