சென்னை: தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் பல்வேறு மோசடி வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்த 2 மேற்குவங்க வாலிபர்களை மாநில சைபர் க்ரைம் போலீசார் வங்கதேச எல்லையில் கைது செய்தனர்.
ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் செய்து பொதுமக்களிடம் சைபர் குற்றவாளிகள் பணத்தை பறித்து வந்தனர். இதுதொடர்பாக 35க்கும் மேற்பட்ட வழக்குகள் மாநில சைபர் க்ரைம் பிரிவில் நிலுவையில் உள்ளது.
இதையடுத்து ஆன்லைன் வர்த்தக மோசடி, வாட்ஸ் அப் வழியாக ஆன்லைன் மோசடி, போலி வங்கி கணக்கு மூலம் பணம் பறிப்பு ஆகிய 3 வழிகளில் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் பணம் பறித்து வந்த குற்றவாளிகளை கைது செய்ய மாநில சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் தலைமையிலான போலீசார் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில், தனிப்படை ஒன்று மேற்குவங்க மாநிலம் சென்று குற்றவாளிகளை கைது செய்ய அம்மாநில போலீசார் உதவியுடன் முகாமிட்டு வந்தனர். அதன் பயனாக கடந்த 21ம் தேதி மேற்குவங்க மாநிலம் காமத் சங்கரபந்தா பகுதியை சேர்ந்த சஹசாதா ஹொசைன் (23) என்பவரை வங்கதேச எல்லையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மாநில சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சஹசாதா ஹொசைன் மீது 29 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அதேபோல், வாட்ஸ் அப் வழியாக ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்த மேற்கு வங்க மாநிலம் வடக்கு பர்கானாஸ் பகுதியை சேர்ந்த அமித் சஹா(24) என்பவரை கைது செய்தனர். அவர் மீது நாடு முழுவதும் 35 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், போலி வங்கி கணக்கு மூலம் மோசடியில் ஈடுபட்டு வந்த மேற்குவங்கத்தை சேர்ந்த கமலேஷ் தேப்நாத்(36) என்பவரையும் மாநில சைபர் க்ரைம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 குற்றவாளிகளையும் ரயில் மூலம் மாநில சைபர் க்ரைம் போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
