×

வாடகை வீட்டை காலி செய்ய பெண் மறுப்பு மாற்றுச்சாவிபோட்டு திறந்து ரூ.1.20 கோடி கொள்ளை: கைதான உரிமையாளர் வாக்குமூலம்

தொண்டாமுத்தூர்: கோவை அருகே கணுவாயை சேர்ந்தவர் வேல்முருகன் (43). இவர் அதே பகுதியில் தையல் கடை நடத்தி வருவதோடு அவ்வப்போது ரியல்எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். இவருக்கு கணுவாய் பகுதியிலும் சிறுவாணி ரோட்டில் வடவள்ளியிலும் சொந்தமாக 2 வீடுகள் உள்ளது. இதில் வடவள்ளியில் உள்ள வீட்டை கடந்த 10 மாதங்களுக்கு முன்பு லீசுக்கு பிரியா (58) என்பவருக்கு விட்டுள்ளார். ஆனால் வீட்டில் நாய், பூனைகளை வளர்த்து சுகாதாரமற்ற முறையில் அசுத்தமாக வைத்திருந்ததால் காலி செய்யுமாறு கடந்த சில நாட்களாக பிரியாவிடம் கூறி வந்துள்ளார்.

இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வீட்டை காலி செய்ய முடியாது என பிரியா மறுத்துள்ளார். இந்நிலையில், பிரியா தனக்கு சொந்தமான சொத்தை விற்று ரூ.1 கோடியே 20 லட்சம் ரொக்கப்பணத்தை வீட்டில் வைத்திருந்துள்ளார். கடந்த 24ம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டு மாலையில் திரும்பி வந்து பார்த்த போது ரூ.1.20 கோடி கொள்ளை போனது தெரியவந்தது. ஆனால் வீட்டு கதவு, பூட்டு உடைக்காமல் இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து வடவள்ளி காவல்நிலையத்தில் பிரியா புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து, கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் சொந்த வீடு என்பதால் வேல்முருகன் மாற்றுச்சாவியை வைத்து திறந்து, பீரோவில் இருந்த ரூ.1 கோடியே 20 லட்சத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதையடுத்து வேல்முருகனை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். போலீசில் வேல்முருகன் அளித்த வாக்குமூலத்தில், ‘‘பிரியா வீட்டில் நாய்கள், பூனைகள் வளர்த்து அசுத்தமாக வைத்து இருந்தார்.

இதனால் காலி செய்யும்படி பல முறை கூறினேன். ஆனால் மறுத்து வந்ததோடு வீடு சுத்தமாக வைத்திருப்பதாக பொய் சொல்லி வந்தார். இதனால் அவர் இல்லாத போது வீட்டிற்குள் சென்று மொபைலில் போட்டோ எடுக்க முடிவு செய்து மாற்றுச்சாவி போட்டு வீட்டுக்குள் சென்றேன். அப்போது பணப்பையை பார்த்ததும் ஆசைப்பட்டு கொள்ளையடித்து சிக்கிக்கொண்டேன்’’ என தெரிவித்துள்ளார்.

Tags : DONDAMUTHUR ,VELMURUGAN ,KANUWAI ,GOWA ,KANUWAI AREA ,URVANI ROAD ,VADAVALLI ,
× RELATED வரதட்சணை கேட்டு சித்ரவதை மனைவி அடித்துக்கொலை காதல் கணவனுக்கு வலை