×

தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்து அதிகரிப்பு: 3 மாதங்களுக்கு பிறகு புழல் ஏரி மீண்டும் 3 டிஎம்சியாக உயர்வு

திருவள்ளூர், ஆக.27: மழை காரணமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் உள்பட சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் ஆகும். இந்த நீர்த்தேக்ககத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 2,379 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்நிலையில் நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 450 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 400 கன அடியும், பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 17 கன அடியும் அனுப்பப்பட்டு வருகிறது.

சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் புழல் ஏரியும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த, மே மாதம் பூண்டி ஏரி நீர்வரத்து காரணமாக 3 டிஎம்சி நிரம்பியிருந்த புழல் ஏரியின் நீர்மட்டம், பின்பு சென்னையின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் வேகமாக சரிந்து வந்தது. இந்நிலையில், பூண்டி ஏரியிலிருந்து தொடர்ந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு, புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர் நீர்வரத்து காரணமாக புழல் ஏரியின் நீர் இருப்பு 3 மாதங்களுக்கு பிறகு, மீண்டும் 3 டிஎம்சியாக உயர்ந்துள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், தற்போது நீர் இருப்பு 3,004 மில்லியன் கனஅடியாக உள்ளது.

21.2 அடி உயரத்தில் தற்போது 19.96 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால், புழல் ஏரிக்கு வினாடிக்கு 275 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 184 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 91.03% கொள்ளவுடன் 3 டிஎம்சி தண்ணீர் நிரம்பி உள்ளதால், புழல் ஏரி கடல்போல காட்சி அளிக்கிறது. சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் தற்போது 0.170 மில்லியன் கன அடி நீர்மட்டுமே இருப்பு உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 1,019 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்நிலையில் ஏரிக்கு வினாடிக்கு 300 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 165 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதேபோல் கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது 0.382 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்நிலையில் ஏரிக்கு வினாடிக்கு 320 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

Tags : Chennai ,Puzhal lake ,Thiruvallur ,Poondi ,Puzhal ,Chembarambakkam ,Poondi Sathyamoorthy Sagar reservoir ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...