×

மாமல்லபுரத்தில் ரூ.43.25 லட்சத்தில் வாங்கப்பட்டு பயன்பாடின்றி கிடக்கும் கழிவுநீர் உறிஞ்சும் டேங்கர் லாரி

மாமல்லபுரம், ஆக. 27: மாமல்லபுரம் நகராட்சியில் உள்ள 15 வார்டுகளில், மொத்தம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மாமல்லபுரம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 7 மாதங்கள் கடந்து விட்டது. நகராட்சி ஆணையராக மார்ச் 9ம் தேதி சுவீதா முதல் பெண் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். மாமல்லபுரம் பேரூராட்சியாக இருக்கும் போது, கழிவுநீர் உறிஞ்சுவதற்கும், அடைப்பை அகற்றுவதற்கும் டெண்டர் விடப்பட்டு, அப்பணிகள் தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இப்பணியை மேற்கொள்ள பொதுமக்களிடம் இருந்து குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது.

எனவே, நகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் வாங்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கையை ஏற்று, மாமல்லபுரம் நகராட்சிக்கு தூய்மை இந்தியா திட்டம் மூலம் ரூ.43.25 லட்சம் மதிப்பில் கழிவுநீர் உறிஞ்சுவதற்கும், கழிவுநீர் அடைப்பை அகற்றுவதற்கும் பல்வேறு வசதிகள் கொண்ட ஒரு டேங்கர் வாகனம் கடந்த 5 மாதத்துக்கு முன்பு வாங்கப்பட்டது. இதன் மூலம், குறைந்த கட்டணத்திலோ அல்லது இலவசமாகவோ கழிவுநீரை உறிஞ்சவும், அடைப்பை உடனுக்குடன் சரி செய்யவும் முடியும் என கூறப்படுகிறது.

நகராட்சி ஆணையராக பொறுப்பேற்று 2 மாதங்களிலேயே தூய்மை இந்தியா திட்டம் மூலம் கழிவுநீர் உறிஞ்சும் டேங்கர் வாகனம் வாங்குவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட நகராட்சி ஆணையர் சுவீதாயை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். ஆனால், கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் வாங்கப்பட்டு, 5 மாதங்களை கடந்தும், பயன்பாடின்றி மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வீணாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மேனுவல் மூடி வழியாக வெளியேறும் கழிவுநீரை உடனடியாக அகற்றி அடைப்பை சரி செய்ய முடியாமல் நகராட்சி ஊழியர்கள் தவித்து வருகின்றனர். எனவே, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா உடனடியாக தலையிட்டு பாதாள சாக்கடை அடைப்பை உடனுக்குடன் சரிசெய்யும் வகையில், கழிவுநீர் உறிஞ்சும் டேங்கர் லாரியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Mamallapuram ,Mamallapuram Municipality ,Panchayat ,Suweetha ,Municipal Commissioner ,
× RELATED உத்திரமேரூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்