மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது மரணமடைந்தார். இதுதொடர்பாக கொலை வழக்கு பதிந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இதில் 5 தனிப்படை போலீசார் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கோயிலை சுற்றியுள்ள முக்கிய சாட்சிகள், பேராசிரியை நிகிதா ஆகியோரிடம் விசாரணையை முடித்து மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து வந்து விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் மீண்டும் டெல்லிக்கு சென்றுள்ளனர். தற்போது மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஒரு எஸ்ஐ மட்டுமே உள்ளார். சில தினங்களுக்கு முன்பு ஆட்டோவில் 4 மர்ம நபர்கள் சிபிஐ அலுவலக பகுதிக்கு வந்து நோட்டமிட்டுள்ளனர். சிறிது நேரம் அங்கேயே வலம் வந்து திரும்பிச் சென்றுள்ளனர். இதேபோல் 2 நாளுக்கு பிறகு மீண்டும் அதே போல ஆட்டோவில் வந்துள்ளனர்.
இதுகுறித்து சிபிஐ அதிகாரி மேலதிகாரிக்கு தெரிவித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து, மதுரை விருந்தினர் மாளிகைக்கு சென்று தங்கி உள்ளார். ஆனால் அதே ஆட்டோவில் 4 பேர அங்கும் வந்து நோட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘எங்களுக்கு புகார்கள் எதுவும் வரவில்லை. சிபிஐ அலுவலகத்தில் ஏற்கனவே சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் பாதுகாப்பு கேட்டால் மேல் அதிகாரிகள் மூலம் வழங்கப்படும்’’ என்றனர்.
