*அதிகாரிகளுக்கு திருப்பதி கலெக்டர் உத்தரவு
திருப்பதி : திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, தொலைதூரப் பகுதிகளிலிருந்து வந்த மனுதாரர்களுக்கு வளாகத்தில் அமர நாற்காலிகள், குடிநீர், தேநீர் வழங்கப்பட்டது. மேலும், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையால் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
கூட்டத்திற்கு கலெக்டர் வெங்கடேஷ்வர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 321 கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார். பொதுமக்களிடம் பெற்ற மனுக்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் தீர்க்கவும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது குறிப்பிட்ட நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டர் வெங்கடேஸ்வர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் பல மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதற்கு பதிலளித்த கலெக்டர், ஓய்வூதியம் பெற வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு சிறப்பு கவுண்டர் அமைக்க வேண்டும் என கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் ஓய்வூதியத்தில் சிறப்பு கவனம் செலுத்தி அரசாங்க விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி அனைத்து தகுதிகளும் இருந்தால், அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மாவட்டத்தின் பிரிவு மற்றும் மண்டல அளவிலான ஆர்டிஓக்கள், தாசில்தார்கள், எம்பிடிஓக்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் மெய்நிகர் முறையில் பேசி, காணொலி மாநாடு மூலம் மனுதாரர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கப்பட்டது.
இதில் பயிற்சி கலெக்டர் சந்தீப் ரகு வான்சி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜி.நரசிம்முலு, சிறப்பு துணை ஆட்சியர்கள் தேவேந்திர ரெட்டி, சிவசங்கர் நாயக், சுதா ராணி ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனர்.
