*பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
பொள்ளாச்சி : விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தாலுகா பகுதியில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பதட்டமான இடங்களில் மாவட்ட எஸ்பி தலைமயில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்து முன்னணி உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், நகரில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் பகுதிகளில் நேற்று எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் போலீசார் ரோந்து சென்று ஆய்வுப்பணி மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, மாலையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. உடுமலை ரோடு மரப்பேட்டை வீதி பகுதியிலிருந்து போலீஸ் அணிவகுப்பு துவங்கியது. இதற்கு மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
ஏஎஸ்பி சிரிஷ்டிசிங் முன்னிலை வகித்தார். மரப்பேட்டையிலிருந்து துவங்கிய கொடியணிவகுப்பு எஸ்எஸ் கோவில் வீதி, வெங்கட்ரமணன் வீதி, மத்திய பஸ் நிலையம், பாலக்காடு ரோடு வழியாக காந்தி சிலையை வந்தடைந்தது. இதில் ஏராளமான போலீசார், ஆயுதப்படை போலீசார், அதிவிரைவுப்படை போலீசார் பலர் கலந்து கொண்டனர். அதிலும், பல போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியை உறுதிப்படுத்தினர்.
