சென்னை: செல்லப்பிராணிகள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தமிழ்நாடு பிராணிகள் நலவாரியத்தில் செப்.30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் இயங்கிவரும் அனைத்து செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்களும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் பிராணிகள் வதை தடுப்பு விதிகள் படியும், தமிழ்நாட்டில் இயங்கிவரும் அனைத்து நாயின இனப்பெருக்கம் மற்றும் விற்பனை நிலையங்களும் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் பிராணிகள் வதை தடுப்பு சட்டப்படியும் தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்திடம் பதிவுசெய்து கொள்ளப்பட வேண்டும் என 12.9.2020 அன்று தினசரி நாளிதழில் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பை ஏற்று ஒரு சில செல்லப்பிராணிகள் விற்பனை நிலையம் மற்றும் நாயின இனப்பெருக்கம் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தமிழ்நாடு பிராணிகள் நலவாரியத்தில் பதிவு மேற்கொண்டுள்ளனர். எனவே இதுவரை பதிவு செய்யாமல் நிறுவனங்களை நடத்துபவர்கள் உடனடியாக https://tnawb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30.9.2025க்குள் மேலே குறிப்பிட்டுள்ள விலாசத்திற்கு கிடைக்கப்படும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். 1.10.2025க்குப்பின் பதிவு செய்யாமல் நடத்தப்படும் நிறுவனங்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
