×

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு பணியிடங்களுக்கு 89 நபர்கள் தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி 1ல் அடங்கிய பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 89 நபர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி- 1க்கான முக்கிய பணியிடங்களுக்கான பணிகளில் 15 துணை ஆட்சியர்கள், 23 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 14 உதவி ஆணையர்கள் (வணிக வரி), 21 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்கள், 14 உதவி இயக்குநர்கள் (ஊரக வளர்ச்சி), ஒரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் ஒரு மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்) என மொத்தம் 89 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பணிநியமன ஆணைகளை பெற்றுக் கொண்டவர்கள், முதல்வருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

அகில இந்திய பணிகள் மற்றும் ஒன்றிய அரசு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு நடத்தப்படும் அடிப்படை பயிற்சியை போன்றே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-1ல் அடங்கிய பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் அலுவலர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில், கடந்த ஆண்டு முதல், தொகுதி-I அலுவலர்களுக்கு பொது அடிப்படை பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு, தற்போது பணி நியமனம் வழங்கப்பட்டுள்ள 89 தொகுதி-1 அலுவலர்களுக்கு. வரும் செப்டம்பர் 8ம் நாள் முதல் சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் பொது அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் முருகானந்தம், மனித வள மேலாண்மைத் துறை செயலாளர் சமயமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu Public Service Commission ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Chennai Secretariat ,
× RELATED டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு...