திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி 2014, ஏப். 10ம் தேதி தரம் உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சியில் 2011 முதல் 2016 வரை நகராட்சி தலைவராகவும், பின் மாநகராட்சியாக தரம் உயர்த்திய பிறகு முதல் மேயராகவும் அதிமுகவை சேர்ந்த மருதராஜ் இருந்தார். தற்போது திண்டுக்கல் மாநகராட்சியில் பழைய கணக்குகள் முதல் தற்போது கணக்குகள் வரை தணிக்கை பணி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் துணை இயக்குனர் தலைமையில் 2015-16 முதல் 2018-19ம் ஆண்டு வரை கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.
திண்டுக்கல் மாநகராட்சி மேயராக அதிமுகவை சேர்ந்த மருதராஜ் இருந்த 2015ல் இருந்து 2019 வரை பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளது என தெரிய வந்துள்ளது. இதில், வருவாய் மற்றும் முதலீடு நிதி, குடிநீர் வழங்கல் நிதி, பாதாளச் சாக்கடை நிதி மற்றும் தொடக்க கல்வி நிதி ஆகியவற்றிலிருந்து ரூ.17 கோடி வரை (ரூ.17,73,16,820) வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி தற்போது திண்டுக்கல் ஊழல் மற்றும் கண்காணிப்பு துறையினர் முதல் கட்ட விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன்படி, அப்போதைய மாநகராட்சி ஆணையர் மனோகர் மற்றும் மாநகராட்சி துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணன் ஆகியோர், திண்டுக்கல் மாநகராட்சி வார்டுகள் 1 முதல் 12 வரை சொத்து வரியில் ரூ.18,00,272 வரை முறைகேடு நடந்துள்ளதாக தெரிய வருகிறது. மேலும், சென்னையைச் சேர்ந்த சுசி இண்டஸ்ட்ரீஸ் மூலமாக திண்டுக்கல் மாநகராட்சிக்கு 137 குப்பை தொட்டிகள் ரூ.19,834 மதிப்பை ரூ.37,750 என உயர்த்தி வாங்கியது தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் 4 பிரிவின் கீழ் பல்வேறு வழக்குகளை திண்டுக்கல் ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில், முன்னாள் மாநகராட்சி ஆணையர் மனோகர், முன்னாள் மாநகராட்சி துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணன், முன்னாள் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் கணேசன் (ஓய்வு), முன்னாள் மாநகராட்சி துணை பொறியாளர் மாரியப்பன், மாநகராட்சி துணை பொறியாளர் சுவாமிநாதன் மற்றும் சென்னை சுசி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் நடராஜன் ஆகியோர் மீது போலீசார் கடந்த ஆக.22ம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர் விசாரணையில், அப்போது இருந்த அதிமுக மேயர், அதிமுக வார்டு கவுன்சிலர்கள் ஆகியோருக்கு, இந்த ஊழல் வழக்கில் தொடர்பு இருக்கிறதா என்பது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
