×

முதல்வரை அவதூறாக பேசிய விஜய் மீது வழக்குப்பதிய வேண்டும்: போலீசில் வக்கீல் புகார்

திருத்துறைப்பூண்டி: தமிழக முதல்வரை அவதூறாக பேசிய விஜய் மீதும், தொண்டரை தூக்கி வீசிய அவரது பவுன்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி திருத்துறைப்பூண்டி போலீசில் வக்கீல் ஒருவர் புகார் அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் அதே பகுதியை சேர்ந்த வக்கீல் சிவசாகர்(41) நேற்று புகார் மனு அளித்தார். அதில், மதுரை மாங்குளத்தில் கடந்த 21ம் தேதி நடந்த தவெக 2வது மாநில மாநாடு நடந்ததை எனது செல்போனில் காணொலியில் பார்த்தேன். அந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசும்போது, தமிழ்நாடு முதல்வரை விமர்சித்தும், அவதூறாகவும், கேலி செய்யும் விதமாகவும் பேசியுள்ளார்.தமிழக முதல்வர் சாதி, மதம், தன்னலம் கருதாமல் விருப்பு, வெறுப்பின்றி மக்கள் பணியாற்றி வருகிறார். தனது செல்வாக்கை உயர்த்தி கொள்வதற்காகவே விஜய் இப்படி பேசியுள்ளார். மேலும் மாநாட்டில் விஜய் அருகே நெருங்கி வந்த அவரது தொண்டரை விஜய்யின் பாதுகாவலர்கள் தூக்கி வீசியது மனிதநேயமற்ற செயலாகும். எனவே தமிழக முதல்வர் மீது அவதூறு பரப்பிய விஜய் மற்றும் நடைமேடையில் இருந்து தொண்டரை தூக்கி வீசிய விஜய்யின் பவுன்சர்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Vijay ,Thiruthuraipoondi ,Tamil Nadu ,Chief Minister ,Thiruvarur district ,
× RELATED பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தவெக...