புதுடெல்லி: பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) நடத்தும் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்தும் நியமனங்களில் வெளிப்படைத்தன்மை கோரியும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று முன்தினம் தேர்வர்கள் போராட்டம் நடத்தினர். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது டெல்லி போலீசார் தடியடி நடத்தினர். மேலும் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது: நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தைத் திருடுவது மோடி அரசின் பழக்கமாகிவிட்டது. எஸ்எஸ்சி தேர்வுகளில் முறைகேடுகளை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தடியடி மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த 11 ஆண்டுகளில், பாஜ இளைஞர்களின் ஆட்சேர்ப்புத் தேர்வுகளிலிருந்து வேலைகள் வரையிலான பயணத்தை வினாத்தாள் கசிவு மாபியாக்களிடம் ஒப்படைத்து, கல்வி முறையை அழித்துவிட்டது. நாட்டில் உள்ள இளைஞர்கள் இந்த அநீதியை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது: இளைஞர்கள் வேலைவாய்ப்பு மற்றும் நீதிக்கான தங்கள் உரிமைகளை மட்டுமே கோரினர். அவர்களுக்கு என்ன கிடைத்தது? லத்திகள். மோடி அரசாங்கம் நாட்டின் இளைஞர்களைப் பற்றியோ அல்லது அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப்படுவதில்லை என்பது தெளிவாகிறது. ஏன்? இந்த அரசாங்கம் மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வரவில்லை, மாறாக வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்தது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
