சென்னை: டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் மாலை சென்னைக்கு திரும்பி வந்த ஆளுநர் ரவிக்கு, மீண்டும் டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கனவே நான்கு நாட்கள் பயணமாக, கடந்த 20ம் தேதி, சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லியில் ஒன்றிய விவசாயத்துறை அமைச்சரை சந்தித்து பேசினார். அப்போது தமிழக விவசாயிகள் நிலை குறித்து பேசியதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி அவருடைய இணையதளத்தில் பதிவும் செய்து இருந்தார்.
அதன் பின்பு 4 நாட்கள் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்தார். இந்நிலையில் ஆளுநர் ரவி, திடீரென அவசர பயணமாக மீண்டும் நேற்று காலை 8.55 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்ல இருந்தார்.
ஆனால், இந்த விமானம் ஒன்றேகால் மணி நேரம் தாமதமாக 10.15 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. அவருடன் கவர்னரின் செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றனர். கவர்னருக்கு டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வந்ததால், அவர் மீண்டும் திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கவர்னரின் திடீர் டெல்லி பயணம், தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
