×

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சால் அதிமுக-பாஜ கூட்டணியில் மீண்டும் குழப்பம்: எடப்பாடி தலைமையில் 30ம் தேதி நடக்கும் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முக்கிய முடிவு

சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சால், அதிமுக – பாஜ கூட்டணியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 30ம் தேதி நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. தமிழக வெற்றி கழகம் கட்சியின் 2வது மாநில மாநாடு மதுரையில் கடந்த வியாழக்கிழமை நடந்தது. அப்போது பேசிய நடிகர் விஜய், ‘‘எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை இன்று யார் கட்டிக்காப்பது? அதிமுக கட்சி இன்று எப்படி உள்ளது.

அதிமுகவில் அப்பாவி தொண்டர்கள் தவிக்கிறார்கள்’’ என்று அதிமுகவை குற்றம்சாட்டி பேசினார். இந்த சூழ்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் பிற்பகல் நெல்லை வந்தார். அவர் பாஜ நிர்வாகிகள் மற்றும் மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ‘‘தமிழகத்தில் அதிமுகவுக்கு 21% வாக்குகளும், பாஜவுக்கு 18% வாக்குகளும் உள்ளன. 2026ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜ – அதிமுக கூட்டணி வெற்றிபெற்று, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்’’ என்றார்.

அமித்ஷா பேசும்போது கடைசி வரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரை கூட உச்சரிக்கவில்லை. தமிழகத்தில் அதிமுகவுக்கு இணையாக பாஜ செல்வாக்கு உள்ளது என்று மறைமுகமாக கூறி விட்டு சென்றுள்ளார்.  அப்படியென்றால், தேர்தலில் போட்டியிடும்போது தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பாஜ எப்படியும் 100 சீட் தங்களுக்கு வேண்டும் என்பதை மறைமுகமாக அதிமுக தலைமைக்கு கூறிவிட்டு சென்றுள்ளதாகவே அக்கட்சி தொண்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

100 இடங்களில் பாஜ போட்டியிட்டால் மட்டுமே அதிமுக – பாஜ கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமைக்க முடியும் என்ற நிலை உள்ளது. அதேநேரம் இந்த கூட்டணியில் மேலும் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்று இன்னும் ஒரு தெளிவான முடிவு எட்டப்படவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் செங்கல்பட்டு தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசுகையில், ‘‘தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் அதிமுக பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்று தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்’’ என்றார்.

இதனால், அதிமுக – பாஜ கூட்டணியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்து. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் இரவே அதிமுக தலைமை கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், ‘‘அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 30ம் தேதி சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அவசர கூட்டம் 30ம் தேதி சென்னையில் நடைபெறுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில், அமித்ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரம் தவெக தலைவர் விஜய், அதிமுக கட்சியை பற்றி கடுமையாக விமர்சனம் செய்துள்ளதற்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags : Union Interior Minister ,Amitsha ,Atamuga-Baja ,Edappadi ,Chennai ,Adimuka-Baja ,Edimuga District Secretaries ,Edappadi Palanisami ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...