×

மாவட்டத்தில் உள்ள 4 வட்டாரங்களிலும் முதல்வரின் உழவர் நல சேவை மையம் அமைக்க அனுமதி

*விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் 4 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது எனவும் இம்மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து சேவைகளும் வழங்கப்படும் என ஊட்டியில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மசினகுடி துணை இயக்குநர் அருண், தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளுக்கு உரிய துறை அதிகாரிகளிடம் இருந்து விவரம் பெறப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு பேசியதாவது:

அதீத உரம், பூச்சிகொல்லி மற்றும் களைகொல்லி ஆகியவற்றின் விளைவுகளை நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு உணர்த்தும் வகையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் நஞ்சநாடு, கக்குச்சி, கூக்கல், தும்மனட்டி, கேத்தி, அதிகரட்டி போன்ற பகுதிகளில் ஒவ்வொரு பயிருக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவை விட உரம், பூச்சிக்கொல்லி மற்றும் களை கொல்லி ஆகியவற்றின் பயன்பாடு அதிகமாக உள்ளது. நீலகிரி மாவட்டம் போன்ற மலைப்பகுதிகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்த உயர் தொழில்நுட்பங்களான டிேரான், பூம் ஸ்ப்ரேயர் போன்றவை மிகவும் பயனுள்ளதாக அமையும்.

ஒவ்ெவாரு வட்டாரத்திலும் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைப்பதற்கு 4 இலக்குகள் பெறப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மையம் அமைப்பதற்கு மொத்த மதிப்பீடு ரூ.10 லட்சம் அதில் 30 சதவீதம் என ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும். சேவை மையம் அமைப்பதற்கு தகுதியுடைய வேளாண் பட்டதாரிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

அவ்வாறு அமைக்கப்படும் உழவர் நல சேவை மையங்களில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து சேவைகளும் வழங்கப்படும். எடப்பள்ளியில் உள்ள ஒருங்கிணைந்த கிராமப்புற சந்தை வணிக வளாகத்தில் உள்ள 500 மெட்ரிக் டன் கிடங்கில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 14ம் தேதி பூண்டு ஏலம் நடத்தப்பட்டது.

இதில் 135 சிப்பம் பூண்டு விவசாயிகளால் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில் 46 விவசாயிகளும் என்சிஎம்எஸ் மற்றும் 6 வியாபாரிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
எனவே விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எடப்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்து பயனடையலாம். விவசாயிகள் மற்றும் உரிமம் பெற்ற வணிகர்களுக்கு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மூலம் வாழைக்கன்றுகள் தேர்வு செய்தல் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடலூரில் வன உயிரினங்களால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு கால தாமதமின்றி நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை 107 பேருக்கு நிவாரண தொகையாக ரூ.62 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நிவாரணம் வேண்டி பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எடக்காடு பகுதியில் உயர் மின் அழுத்த கம்பித்தடம் அமைக்க சேதப்படுத்தப்பட்ட தேயிலை தோட்டங்களுக்கு ஜூன் 18 வரை 14 பேருக்கு ரூ.40.47 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை 7 முதல் 10 வரை 20 பேருக்கு ரூ.39.41 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக வருவாய்த்துறை விவரங்கள், வங்கி கணக்குகள் சேகரிக்கப்பட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களில் இயற்கையாக வளர்ந்துள்ள மரங்களை தவிர நட்டு வளர்க்கப்பட்ட முதிர்ச்சியடைந்த மரங்களை வெட்ட மாவட்ட கமிட்டிக்கு உரிய முறையில் விண்ணப்பம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. இதில் தோட்டக்கலைத்துறையினர் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Farmer Welfare Service Centers ,Ooty ,Minister ,Nilgiris ,
× RELATED டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு...