×

இந்தியா கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நாளை சென்னை வருகை: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்

சென்னை: துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நாளை சென்னை வருகிறார். அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளார். இந்தியாவின் 14வது குடியரசு துணை தலைவராக பதவி வகித்தவர் ஜகதீப் தன்கர். இவர் தனது பதவியை கடந்த ஜூலை 21ம் தேதி ராஜினாமா செய்தார். இவரின் பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் 10ம் தேதி வரை இருந்தது. ஆனால், உடல்நலத்தை காரணம் காட்டி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதையடுத்து, குடியரசு துணை தலைவர் பதவி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தொடர்ந்து அடுத்த மாதம் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் பொறுப்பிற்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும், அரசியல் தலைவர்கள் மத்தியிலும் எழுந்தது. இந்நிலையில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அறிவித்தது. அவரை போட்டியின்றி தேர்வு செய்ய எதிர்க்கட்சிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு போட்டியாக இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தது. தொடர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகளின் பொது வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளர்களாக போட்டியிடுவார் என்று அறிவித்தது. இதையடுத்து பாஜ கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடி முன்னிலையில் கடந்த 20ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்தியா கூட்டணியின் வேட்பாளரான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி நேற்று முன்தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுக்கன் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. மனுக்களை வாபஸ் பெற வரும் 25ம் தேதி கடைசி நாள் ஆகும். வாக்கெடுப்பு வரும் 9ம் தேதி காலை 10.15 மணிக்கு நடைபெறும். அன்றே வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே எஞ்சியுள்ளதால் தேர்தல் பணிகளில் 2 வேட்பாளர்களும் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் 2 வேட்பாளர்களும் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளனர்.  இதற்கிடையில் இந்தியா கூட்டணியின் வேட்பாளரான சுதர்சன் ரெட்டி நாளை தமிழகம் வர உள்ளார். தமிழகம் வரும் அவர் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேச உள்ளார்.

அப்போது குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதற்காக வாழ்த்துகளை பெற உள்ளார். மேலும் தேர்தலில் திமுக சார்பில் வாக்களிக்குமாறு ஆதரவும் கோர உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது முழு ஆதரவை அளிக்க உள்ளார். சந்திப்புக்கு பின்னர் இரண்டு பேரும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து சுதர்சன் ரெட்டி திமுக கூட்டணி கட்சி தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார். பாஜ கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் ஒவ்வொரு மாநிலமாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார். அவரும் விரைவில் தமிழகம் வந்து கூட்டணி கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுவார் என்று கூறப்படுகிறது.

* தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே எஞ்சியுள்ளதால் தேர்தல் பணிகளில் 2 வேட்பாளர்களும் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்

Tags : India Alliance ,Vice Presidential Candidate ,Sudarshan Reddy ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Vice Presidential election ,India ,Republic… ,
× RELATED தேசிய வருவாய் வழி மற்றும் திறன்...