×

மதுரை தவெக மாநாடு நடந்த திடலில் 50,000 நாற்காலிகள் உடைப்பு: டன் கணக்கில் குவிந்த குப்பைகள், எங்கு பார்த்தாலும் காலி பாட்டில்கள், செருப்புகள்

திருமங்கலம்: மதுரை அருகே நடந்த தவெக மாநாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாற்காலிகள் உடைக்கப்பட்டன. காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள், செருப்புகள் என மாநாட்டு திடலே குப்பை மேடாக காட்சியளிக்கிறது. மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் பாரப்பத்தியில் தவெக 2வது மாநில மாநாடு நேற்றுமுன்தினம் நடந்தது. சுமார் 500 ஏக்கரில் அமைக்கப்பட்டிருந்த இந்த மாநாட்டு திடலில் கட்சி தலைவர் விஜய், தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், தமிழகம் முழுவதும் இருந்து இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்சி மாநாடு எப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக இந்த மாநாட்டை குறிப்பிட்டுச் சொல்லலாம். மாநாட்டுக்கு முன்பு விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மாநாட்டுக்கு வர வேண்டாமென கூறியிருந்தார். இந்த உத்தரவு காற்றில் பறந்தது. 102 டிகிரியை தாண்டி கொதித்த பாரப்பத்தி பகுதியில், மாநாட்டில் பலர் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் வந்து பெரும் தவிப்பிற்கு ஆளாயினர்.

பல இடங்களில் குழந்தைகள் கதறுவதை காண முடிந்தது. இதனால் சுமார் 375க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். மேலும், போலீசார் மாநாட்டிற்காக விடுத்த நிபந்தனைகளும் காற்றில் பறந்தன. காருக்கு வெளியே தலையை நீட்டியும், வாகனங்களின் கதவுகளின் மீது ஆபத்தான முறையில் உட்கார்ந்தும் மாநாட்டிற்கு வந்தனர். விஜய் ராம்ப் வாக் சென்றபோது சிலர் உயரமான நடைமேடையை பொருட்படுத்தாமல், தாவிக் குதித்து, தட்டுத்தடுமாறி விஜய்யை நோக்கி ஓடினர்.

தொண்டர்களை கட்டுப்படுத்த தடுப்பின் மீது கிரீஸ் தடவியும், பவுன்சர்களை அதிகரித்தும் எந்தப் பலனுமில்லை. மாநாடு நடக்கும் பகுதி மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த தடம் எப்போதும் போக்குவரத்து நிறைந்திருக்கும். மாநாட்டிற்கு வந்தவர்கள் தங்களின் வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தியதால் போக்குவரத்து முழுமையாகப் பாதித்தது. அவசர வேலையாக சென்றவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பரிவித்தனர். 4 ஆம்புலன்ஸ்களும் நெரிசலில் சிக்கிக் கொண்டன.

பொதுவாக, மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்கள், தலைவர் பேசி முடியும் வரை அமைதி காக்க வேண்டும் என்பதுதான் முறை. ஆனால், பலர் விஜய்யை பார்த்துட்டோம்… அவர் பேச்சை கேட்டு என்ன ஆகப்போகிறது என்பது போல, ராம்ப் வாக் நிகழ்ச்சி முடிந்த உடனே கிளம்பிச் செல்லத் துவங்கினர். மதுரை உட்பட பல இடங்களில் இதற்கு முன் எத்தனையோ மாநாடுகள் நடந்திருக்கின்றன. ஆனால், இதுபோன்ற சம்பவம் வேறெந்த மாநாட்டிலும் நிகழ்ந்ததில்லை. மேலும், பணம் கொடுத்து அழைத்து வந்தவர்களில் பலர், காசு, பணம் கிடைக்காட்டினாலும் பரவாயில்லை.

வெயில் தாங்க முடியலைப்பா என்று கூறியபடியே கிளம்பியதையும் பார்க்க முடிந்தது. மேலும், மது பாட்டில்களுடன் கோயிலுக்கு சென்றது போன்ற பல விஷயங்கள் மக்களிடம் அதிருப்தியையே ஏற்படுத்தின. மாநாட்டுத் திடலில் இரும்பு கம்பியால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு திடலின் பல்வேறு பகுதிகள், பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டிருந்தது. அதில் தொண்டர்கள் அமர 1.50 லட்சம் பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தன. விஜய் மேடைக்கு ஏறியதும் தொண்டர்கள் நாற்காலிகள், இரும்பு தடுப்புகளில் ஏறி நின்று ஆரவாரம் செய்தனர்.

இதனால், பிளாஸ்டிக் சேர்கள் உடைந்து சேதமடைந்தன. மாலை 5.30 மணிக்கு மாநாடு முடிந்த சிறிது நேரத்தில் விஜய், மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் புறப்பட்டு சென்றனர். இதன்பிறகு அங்கிருந்த தொண்டர்கள் நாற்காலிகளை தூக்கி வீசி நாசப்படுத்தினர். இதனால் மாநாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் உடைந்து சேதமடைந்தன. உடைந்த பிளாஸ்டிக் சேர்கள், தொண்டர்கள் சாப்பிட்டு தூக்கி வீசிய பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், காலி வாட்டர் கேன், கவர்கள் ஆகியவற்றால் மாநாட்டு திடல் பகுதியில் டன் கணக்கில் குப்பைகள் தேங்கி நேற்று மலை போல காட்சியளித்தது.

மேலும் ஆங்காங்கே செருப்புகளும் சிதறிக் கிடந்தன. பல தொண்டர்கள் இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை இழுத்து கீழே தள்ளி சென்றனர். மேலும் மாநாட்டு திடலை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தகர ஷெட்டுகளை உடைத்து தொண்டர்கள் அவசர வழியை ஏற்படுத்தி சென்றதும் தெரிய வந்துள்ளது. மாநாட்டுத் திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் பல இடங்களில் தொண்டர்களால் உடைத்து எறியப்பட்டது.

இது தவிர மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் பார்க்கிங் பகுதிக்கு செல்ல சாலை டிவைடர் பகுதி 4 இடங்களில் உடைக்கப்பட்டிருந்தன. வாகனங்களுக்காக அமைக்கப்பட்ட பார்க்கிங் பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருள்கள் குவிந்து கிடந்தன. திடலில் அமைக்கப்பட்ட தற்காலிக கடைகளின் குப்பை கழிவுகள் தேங்கி தூர்நாற்றம் வீசத் துவங்கியது…. கடந்த ஆண்டு விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநில மாநாட்டிலும் இதேபோல பல ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் சேர்கள் அடித்து உடைக்கப்பட்டிருந்தன.

இம்முறை மதுரை மாநாட்டில், உடைக்கப்பட்ட சேர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், தவெக நடத்தும் மாநாடுகளுக்கு பிளாஸ்டிக் சேர்கள் வாடகைக்குக் கொடுக்க அஞ்சி ஒதுங்கும் நிலை ஏற்படலாம் என ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆக மொத்தத்தில், அரசியலை பற்றி விஜய் காரசாரமாக பேசுவது ஒருபுறம் இருந்தாலும், தொண்டர்களையும் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். மாநாட்டில் நடந்த பல நிகழ்வுகள், இதற்கு முன் எந்த மாநாட்டிலும் காண முடியாத விஷயங்களாக இருந்தன. கடும் வெயில் அடிக்கும் மதுரையில் மாநாடு நடத்தியது, போதிய அடிப்படை வசதிகள் செய்யாதது  என மாநாட்டில் பாதகமான விஷயங்களை அதிகமிருந்தது அரசியல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

* டிராக்டர் மீது தவெகவினர் பஸ் மோதி சென்னையை சேர்ந்த 10 பேர் காயம்
சென்னை, பெரம்பூர், வியாசர்பாடி, எழும்பூர் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேற்றுமுன்தினம் மதுரையில் நடந்த அக்கட்சி மாநாட்டிற்கு தனியார் டிராவல்ஸ் பேருந்தில் சென்றனர். பின்னர் மாநாடு முடிந்து நேற்று அதிகாலை அந்த பேருந்தில் சென்னைக்கு திரும்பினர். பேருந்தை ரட்சகன் (28) என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் முன்னால் சென்ற டிராக்டர் மீது இந்த பேருந்து மோதியது.

இதில் டிராக்டர் டிரைவர் காட்டுநெமிலி கிராமத்தைச் சேர்ந்த செந்தாமரைச்செல்வன் (39) படுகாயமடைந்தார். பேருந்து டிரைவர் ரட்சகன் உள்ளிட்ட 9 தவெக தொண்டர்கள் லேசான காயம் அடைந்தனர். விபத்தினால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் தவெக தொண்டர்கள் அவ்வழியாக சென்ற அரசு பேருந்தில் ஏறி சென்னை திரும்பினர்.

* தவெக நிர்வாகிகள் 9 பேர் மீது வழக்கு
மதுரையில் நடந்த தவெக மாநில மாநாடுக்காக பல்வேறு இடங்களில் வரவேற்பு பேனர்களை தவெகவினர் வைத்திருந்தனர். இதற்கு முறையாக எந்தவித அனுமதியும் வாங்கவில்லை. இதுதொடர்பான புகாரின்பேரில், கட்சி நிர்வாகிகள் 9 பேர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Madurai Thaveka ,Thirumangalam ,Thaveka ,Madurai ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்