சென்னை, ஆக.23: பெருங்குடியை சேர்ந்தவர் சாரா வஹாப் (34). இவருக்கு, ராயப்பேட்டை கவுடியா மடம் சாலையில் சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டின் தரை தளத்தில் 3 கடைகளும், முதல் மற்றும் 2வது தளத்தில் 4 வீடுகளும் உள்ளன. கடந்த 2018ம் ஆண்டு இந்த வீட்டில் வசித்து வந்த சாரா வஹாப் பெற்ேறார் சவுதி அரேபியாவுக்கு சென்றுவிட்டனர். அப்போது வீட்டின் தரை தளத்தில் புல்லா ராவ் என்பவர் மட்டும் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார். மற்ற கடைகள் மற்றும் வீடுகள் பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா காலத்தில் சவுதி அரேபியா சென்ற சாரா வஹாப் பெற்றோர் சென்னை திரும்ப முடியாமல் போனது. அதேநேரம் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்த புல்லா ராவும் இறந்துவிட்டார். அவருக்கு பதில் அவரது மகன் அசோக் (34), போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார்.
பிறகு அசோக், வீட்டின் உரிமையாளருக்கு தெரியாமல் பல கோடி மதிப்புள்ள சொத்தின் உரிமையாளர் போல் போலி ஆவணங்கள் தயாரித்து, அதன் மூலம் வீடுகள் மற்றும் கடைகள் என மொத்தம் ரூ.27 லட்சத்திற்கு வாடகை விட்டுள்ளார். இதற்கிடையே, சவுதி அரேபியாவில் இருந்து சாரா வஹாப் சென்னை வந்துள்ளார். பிறகு அவர் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று பார்த்த போது, பூட்டப்பட்டு இருந்த வீடுகள் மற்றும் கடைகள் அனைத்தும் வாடகைக்கு விடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே சம்பவம் குறித்து சாரா வஹாப் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், சாரா வஹாப் மற்றும் அவரது பெற்றோருக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்த அசோக் என்பவர் அபகரித்து, அதை பலருக்கு ரூ.27 லட்சத்திற்கு வாடகை விட்டு மோசடி செய்தது உறுதியானது. பின்னர் போலீசார் அசோக்கை கைது செய்தனர். அவரிடம் இருந்து வீட்டின் உரிமையாளர் என மோசடியாக தயாரித்த போலி அவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
