×

தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்த ரூ.12 கோடி உயர்தர கஞ்சா விமான நிலையத்தில் பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து விமானத்தில், சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்புடைய 12 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் உள்பட கடத்தல் பயணிகள் 2 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் கண்காணித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30 வயது இளைஞர் ஒருவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 33 வயது இளைஞர் ஒருவர் என இரண்டு பேர், சுற்றுலா பயணிகளாக தாய்லாந்து நாட்டிற்கு போய்விட்டு, இந்த விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்தனர். இருவரும் பெரிய பைகள் எடுத்து வந்தனர். இருவர் மீதும் சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருவரையும் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்கள் பைகளை போதைப்பொருட்களை கண்டுபிடிக்கும் மோப்ப நாய் மூலம் பரிசோதித்தனர்.

அப்போது, மோப்ப நாய் இருவருடைய பைகளிலும், போதைப் பொருட்கள் இருப்பதற்கான சைகைகளை செய்ததோடு, அந்த பைகள் அருகே கால்களை மடக்கிக் கொண்டு அமர்ந்து விட்டது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த பைகளை திறந்து பார்த்தபோது, மொத்தம் 8 பார்சல்கள் இருந்தன. பார்சல்களை பிரித்து பார்த்தபோது, அவைகளில் உயர் ரக, பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. மொத்தம் சுமார் 12 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.12 கோடி.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் இருவரையும் கைது செய்ததோடு, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்கள் கஞ்சாவை யாரிடம் கொடுப்பதற்காக கடத்தி வந்தனர். இந்த ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ரூ.12 கோடி மதிப்புடைய உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Thailand ,Chennai ,Chennai airport ,Punjab ,
× RELATED வரதட்சணை கேட்டு சித்ரவதை மனைவி அடித்துக்கொலை காதல் கணவனுக்கு வலை