- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்துக்கான காலி பணியிடங்களை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 2,833 பணியிடங்கள், சிறை காவலர்கள் 180 பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வுக்கு இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதன்படி, ஆகஸ்ட் 22ம் தேதி (இன்று) முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படும். செப்டம்பர் 25ம் தேதி விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். எழுத்து தேர்வு நவம்பர் 11ம் தேதி நடைபெறும். காவல்துறை, சிறை மற்றும் சீர்த்திருத்தத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் மொத்தம் 3 ஆயிரத்து 664 பணி இடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம். வாரிசுதாரர்களுக்கான இட ஒதுக்கீடு, விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு, முன்னாள் ராணுவ வீரர்களுக்கான இட ஒதுக்கீடு, ஆதரவற்ற விதவைகளுக்கான இட ஒதுக்கீடு, தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான முன்னுரிமை ஆகியவை தொடர்பான இட ஒதுக்கீடு சதவீதமும் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள விதிகளின்படி வகுப்புவாரி இட ஒதுக்கீட்டின் கீழ் சதவிகிதம் அனைத்து பதவிகளுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
