சென்னை: திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வரதட்சணை கொடுமை காரணமாக புது மணப்பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ரிதன்யாவின் முழுமையான உடற்கூராய்வு, தடயவியல் ஆய்வு அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,‘திருமணத்திற்கு முன்பே ரிதன்யா தற்கொலை மனநிலையில் இருந்திருக்கிறார். திருமணத்தில் அவருக்கு விருப்பமும் இல்லை. வரதட்சணை துன்புறுத்தல் ஏதும் நடைபெறவில்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும்,’ என்று வாதிட்டார்.
விசாரணை நிலைகுறித்த அறிக்கையை தாக்கல் செய்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், ரிதன்யாவின் ஆடியோ மெசேஜ் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கைக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,‘வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முக்கிய சாட்சிகளிடம் விசாரணையும் முடிவடைந்து விட்டது. எனவே, மனுதாரர்களை சிறையில் வைத்திருக்க அவசியம் இல்லை,’எனக் கூறி 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
