×

10 ஆயிரம் பேருக்கு வழங்க ஏற்பாடு காஞ்சிபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்: எழிலரசன் எம்எல்ஏ தகவல்

காஞ்சிபுரம், ஆக.22: காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில், 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று எழிலரசன் எம்எல்ஏ தெரிவித்தார். காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரத்தில் நேற்று நிருபர்களை சந்தித்து கூறியதாவது: பேரறிஞர் அண்ணாவின் நண்பரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.எம்.அண்ணாமலை அறக்கட்டளை சார்பில், (23.8.2025) நாளை காலை 8.30 மணியளவில், காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், 75க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் 10,000 பேருக்கு வேலை வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அருகில் உள்ள செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட போன்ற பகுதிகளில் இருந்தும் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாமில், 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் அனைத்து வகையான பட்டப்படிப்புகளுக்கும் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த, வேலைவாய்ப்பு முகாம், வழக்கமான வேலைவாய்ப்பு முகாமாக இல்லாமல் க்யூஆர் கோடு வழங்கப்பட்டு, ஸ்கேன் செய்து அவர்களுக்கு வேலை தேடுவதற்கான யூனிக் ஐடி வழங்கப்படும். இதன்மூலம், அவருடைய விவரங்கள் அறிந்து சம்பந்தப்பட்ட கம்பெனிகளுக்கு வேலை தேடுபவர்களுக்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். இரண்டாவது முறையாக நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாமில், 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாமை விவசாய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். இதில் காஞ்சிபுரம் தொகுதி எம்பி க.செல்வம், உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ க.சுந்தர் ,மேயர் மகாலட்சுமி யுவராஜ், தனியார் கல்லூரி தன்னார்வலர்கள், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள். மேலும், வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு குடிநீர் மற்றும் தேநீர், ஸ்னாக்ஸ் வசதிகளும், உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது, பகுதி செயலாளர் திலகர் மற்றும் ஆதித்யன், அகத்தியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Kanchipuram ,Ezhilarasan MLA ,MLA Ezhilarasan ,Perarignar Anna’s… ,
× RELATED உத்திரமேரூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்